மேயர் பதவிக்காகத் தமிழ்நாட்டில் மீண்டும் மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை மேயர் பதவிக்காக நேரடியாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது.

Tamil Nadu Local Body Election New law

பின்னர், தமிழகத்தில் ஆட்சி மாற்றங்களுக்குப் பிறகு, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மேயரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை மீண்டும் 
கொண்டுவரப்பட்டது.

இதனிடையே, தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது  கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலமாகவே மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. 

அதேபோல், நகர்மன்ற தலைவர்களையும், பேரூராட்சித் தலைவர்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களே தேர்வு செய்வார்கள் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த செயலுக்கு, பல்வேறு கட்சிகளும் கடும் விமர்சனம் செய்துள்ளன. மேலும், மேயர் பதவியை ஆளும் கட்சியினர் தக்க வைத்துக்கொள்வதற்காக, இந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனையடுத்து, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

இதனிடையே மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு விருப்ப மனு அளித்தவர்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று அதிமுக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.