தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, “உச்சநீதிமன்ற ஆணையின்படி 9 மாவட்டங்களைத் தவிர்த்து, ஏனைய 27 மாவட்டங்களில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறும்” என்று குறிப்பிட்டார்.  

Tamil Nadu Local Body Election Announcement

அதன்படி, “தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும்” என்றும் அவர் கூறினார். வாக்கு எண்ணிக்கை காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் சுட்டிக்காட்டினார்.

“தேர்தலில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 9 ஆம் தேதி முதல், தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு மீது டிசம்பர் 17 ஆம் தேதி ஆய்வு செய்யப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

Tamil Nadu Local Body Election Announcement

அதேபோல், வேட்பாளர்கள் வேட்புமனுவைத் திரும்பப் பெற டிசம்பர் 19 ஆம் தேதி கடைசி நாள் என்றும், வரும் ஜனவரி 2 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.

குறிப்பாக, மேயர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் பழனிசாமி குறிப்பிட்டார்.