தமிழகத்தில் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ள நிலையில், சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்து உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பாதிப்பான கிட்டத்தட்ட 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் முழு ஊரடங்கானது வரும் 24 ஆம் தேதி வரை, அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அத்துடன், இந்த ஊரடங்கு காலத்தில் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. 

இப்படியான விதிமுறைகள் இந்த ஊரடங்கில் அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு சில சலுகைகளையும் தற்போது அறிவித்து உள்ளது.

அதன் படி, “ஊரடங்கு காலத்தில் கொரோனா விதிகளைப் பின்பற்றி பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் இயங்க” தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் “காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரம் மேற்கொள்ளலாம்” என்று, குறிப்பிட்டு உள்ளது. 

அத்துடன், “ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் செயல்படலாம்” என்றும், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

“தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயலாற்ற அனுமதி” அளிக்கப்பட்டு உள்ளது. 

“ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு உதவ 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம் அமைக்கப்படும் என்றும், சென்னையில் உள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் இந்த சேவை மையம் இயங்கும் என்றும், அதன் படி, 9877107722, 9994339191, 9962993496 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தமிழக அரசின் சேவைகளைப் பெறலாம்” என்றும், தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளது.