தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் இந்த மாத தொடக்கத்தில் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது அது விஸ்வரூபம் எடுத்து மீண்டும் தீவிரமாகப் பரவத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மதுரை மற்றும் தேனியிலும் முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் 29 பேர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இவர்களில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேரும், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரும், நேற்று இரவு முதல் தற்போது வரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேரும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உட்பட மொத்தம் இன்று 29 பேர் இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  

அத்துடன், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு 45 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ள நிலையில், அதிக பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6 ஆயிரத்து 837 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து, அதிகபட்சமாக தண்டையார் பேட்டையில் 5,531 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5316 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும், அண்ணாநகர் மண்டலத்தில் 4922 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 4908 பேருக்கும், திரு.வி.க. நகரில் 3896 பேருக்கும், அடையாறில் 2777 பேருக்கும்,  வளசரவாக்கத்தில் 1957 பேருக்கும், திருவொற்றியூரில் 1755 பேருக்கும், அம்பத்தூரில் 1741 பேருக்கும், மாதவரத்தில் 1383 பேருக்கும், ஆலந்தூரில் 1124 பேருக்கும், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன், சென்னையில் இதுவரை கொரோனா வைரசால் தாக்கப்பட்டு 668 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சென்னையில் இதுவரை 26 ஆயிரத்து 472 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

சென்னையில் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், சென்னை ஐ.ஐ.டி.யில் இருக்கும் மாணவர்கள் விடுதி, கொரோனா சிகிச்சை அளிக்கும் வார்டாக மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேபோல், மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மதுரை மேலூர் காய்கறி மார்க்கெட்டில் 2 வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரையில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது 1073 ஆக உயர்ந்து உள்ளது. மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 641 ஆக உள்ளது. அதேபோல், மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 423 ஆக அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள 35 கடற்படை வீரர்கள் உட்பட 90 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 41 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில், 35 வீரர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் விமானப்படைத் தளமானது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 197 பேருக்கு கொரோனா உறுதியானதால் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,399 ஆக உயர்ந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,099 ஆக உயர்ந்துள்ளது. 

இதனிடையே, ஊரடங்கு மீறலால் தமிழகத்தில் இதுவரை ரூ.15.17 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 7,23,920 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஊரடங்கு மீறலால் 5,35,640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 6,64,944 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.