தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் தீவிரமாக மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

கடந்த 1 ஆம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் 5 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 19 ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இன்று முதல் மதுரை மாவட்டத்துக்கும் வருகிற 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன், மேலும் சில மாவட்டங்களில் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

குறிப்பாக, இதுவரை இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. 

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் இல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தற்போது அதிகரித்து வருவதால், தமிழக அரசு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இதனால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கான நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்துவது குறித்து நாளை காலை 10 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை, காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது, ஒவ்வொரு மாவட்டங்களில் நிலவும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிவதுடன், அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதனால், நாளைய ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும், பல மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.