"விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முதலமைச்சர் பழனிசாமி, தொலைக்காட்சியின் வாயிலாகத் தமிழக மக்களிடையே உரையாற்றினார். 

Tamil Nadu CM EPS advice to people on Corona

அப்போது பேசிய அவர், “இப்போது நான் முதலமைச்சராக இல்லாமல், உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பேசுகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள்” என்று பேசத் தொடங்கினார்.

“சீனாவில் தொடங்கி காட்டுத்தீ போல வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ், உலகத்தையே ஆட்டி படைத்து வருவது நாம் எல்லோரும் அறிவோம். மத்திய அரசின் வேண்டுகோளின்படி, 21 நாட்கள் ஊரடங்கை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். 

இந்த வைரஸ் நோய் எப்படி பரவுகிறது? அதைத் தடுப்பதற்கு ஒவ்வொருவரும் எப்படி இருக்கவேண்டும்? என்பதை அறிந்து செயல்படுவது தற்போது காலத்தின் கட்டாயம்.

கொரோனா வைரஸ், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாகவும், கைகள் மூலமும் பரவுகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. 

Tamil Nadu CM EPS advice to people on Corona

அதன்படி, 10 ஆயிரத்து 158 படுக்கைகள் மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. உங்களின் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து, நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளவர்கள், அவர்களாகவே முன்வந்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் அதை செய்யத் தவறினால், பக்கத்து வீட்டார்கள் சுகாதாரத்துறைக்கோ, காவல் துறைக்கோ தகவல் தெரிவிக்கலாம்.

தனிமைப்படுத்துதல் என்பது உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் சமுதாயத்தையும், நாட்டையும் பாதுகாக்கத்தான். உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், தமிழக அரசுக்கு மிக முக்கியம். இதை, பொது மக்கள் உணர வேண்டும்.

குறிப்பாக, இந்த 21 நாட்கள் ஊரடங்கு விடுமுறை அல்ல. நம்மையும், நம் குடும்பத்தாரையும் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு என்பதை அனைவரும் உணர வேண்டும். நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் வெளியூர் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுகிறேன். இந்த தருணத்தில், நம் அனைவரும் பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும், நம் சமுதாயத்தையும் பாதுகாப்போம். 

விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு” என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதலமைச்சர் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சாதி, மத, இன, மொழி, அரசியல் அனைத்து வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு கொரோனா நோயில் இருந்து தமிழகத்தைக் காப்போம். என இந்த தருணத்தில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.