“சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும், கண்டிப்பாக ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்” என்று,  போக்குவரத்து காவல் துறை அதிரடியாக அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் விபத்துக்களின் எண்ணிக்கையானது அதிக அளவில் நிகழ்ந்துகொண்டிருப்பதாக, கவலை அளிக்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், சென்னையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில், இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் அதிக பட்சமாக உயிரிழந்து உள்ளது தெரிய வந்தது. 

அத்துடன், சென்னையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் கிட்டதட்ட 3,294 பேர் படுகாயம் அடைந்தது உள்ளனர் என்றும், இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்து உள்ளதும் தெரிய வந்திருக்கிறது.

இவற்றுடன், இந்த விபத்தில் 2,929 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அசர்னயிள் பின்னாள் அமர்ந்திருந்த 365 பேர் காயமடைந்து உள்ளதும் தெரிய வந்து உள்ளது.

அதே போல், “கடந்த 5 மாதங்களில் இரு சக்கர வாகனத்தில் பயணித்தவர்களில் 841 பேர் படுகாயமடைந்து உள்ளனர் என்றும், இதில் 741 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும், 127 பேர் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள்” என்றும், சென்னை போக்குவரத்துக் காவல் துறை தகவல் கூறியுள்ளது.

இந்த நிலையில் தான், இருசக்கர வாகன பயணிகளின் நலன் கருதி, “இருசக்கர வானங்களில் பின்னால் அமர்ந்திருப்பவரும் இன்று முதல் கட்டாயம் தலைகவசம் ஹெல்மெட் அணிய வேண்டும்” என்ற அதிரடியான உத்தரவை, சென்னை பெருநகர காவல் துறை அறிவித்து உள்ளது.

குறிப்பாக, 'சென்னை பெருநகர பகுதிகளில் இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்து உள்ளதாகவும்” சென்னை போக்குவரத்துக் காவல் துறை தகவல் கூறியுள்ளது.

முக்கியமாக, சென்னை போக்குவரத்துக் காவல் துறையின் இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த புதிய விதிகளை கண்காணிக்க, சென்னை நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், “ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும், இதனை மீறி செயல்படும் பயணிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும்” என்றும், சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை தற்போது புதிய எச்சரிக்கையை விடுத்து உள்ளது. 

மிக முக்கியமாக, “விபத்திலா நகரை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும், சென்னை மக்களுக்கு சென்னை காவல் துறை வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இதனிடையே, பைக் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் இன்று முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில், இன்றைய முதல் நாளான மதியம் வரை சென்னையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 367 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பயணிகளிடம் தலா 100 ரூபாய் அபராதம் வசூக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.