2021 சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் பழனிசாமி முன்னிலையில் இருக்கிறார்.

தமிழக சட்டசபைதேர்தல் தபால் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் காலை 8 மணி அளவில் தொடங்கி, தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அதன் படி, தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. இவற்றுடன், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காகத் தனி மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

அதன் தொடர்ச்சியாகவே மற்ற வாக்குகள் என்னப்பட்டு வருகின்றன. முக்கியமாக, தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் உள்ள 75 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. 

இவற்றில், ஒவ்வொரு சுற்றும் முடிந்த பிறகு அதற்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாகத் திரையில் அறிவிக்கப்படும். குறைந்தது 15 சுற்றுகளில் இருந்து அதிகபட்சமாக 30 சுற்றுகள் வரை செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதில், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார்.

சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.

அதே போல், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு பின்னடைவை சந்தித்து உள்ளார்.

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

செங்கல்பட்டு தொகுதி முதல் சுற்று நிலவரத்தில் திமுக வேட்பாளர் 1415 வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார்.

ஆக மொத்தமாக, திமுக 131 இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இவற்றில் அதிமுக 86 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

மேலும், பாமக 10 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் பிற கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.