அத்தை மகளை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக காவலர் மற்றும் திருமணம் செய்து வைக்க மறுப்பதாக காவலரின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்து உள்ள திருச்சுழி வட்டம் நரிக்குடி நல்லதரை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் - சாந்தகுமாரி தம்பதிக்கு 27 வயதில் திருமுருகன் என்ற மகன் உள்ளார். இவர், மதுரை சிறப்புக் காவல் படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, காவலர் திருமுருகனும், இவரது அத்தை மகளான 21 வயதான வனிதா என்ற இளம் பெண்ணும், ஒருவரை ஒருவர் நீண்ட ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் நெருங்கிப் பழகி வந்ததால், அவர்கள் இருவரும் தனியாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக இளம் பெண் வனிதா கர்ப்பம் அடைந்தார்.

இதனையடுத்து, “தான் கர்ப்பம் அடைந்திருக்கும் விசயத்தைக் காதலன் திருமுருகனிடம் கூறி, என்னை உடனே திருமணம் செய்துகொள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அவர் சரிவரப் பதில் சொல்லாமல் சமாளித்து உள்ளார். காதலன் இப்படிச் சமாளிப்பதைப் புரிந்துகொண்ட இளம் பெண் வனிதா, நேராக காதலன் திருமுருகனின் பெற்றோரிடம் தான் கருவுற்று இருக்கும் விசயத்தைக் கூறி, “எனக்கு உடனே உங்கள் மகனைத் திருமணம் செய்து வையுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். ஆனால், திருமுருகனின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இளம் பெண் வனிதா, மீண்டும் தன் காதலன் திருமுருகனிடம் “திருமணம் செய்துகொள்ளும் படி” வற்புறுத்தி உள்ளார். 

அப்போது, அவரும் திருமணம் செய்துகொள்ள மறுத்து உள்ளார். இதனால், மனமுடைந்த வனிதா, தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து உள்ளார். இதனையடுத்து, இந்த விசயத்தை தன் பெற்றோரிடமும் அவர் கூறி அழுதுள்ளார். அதன் தொடர்ச்சியாக வனிதாவின் பெற்றோர், திருமுருகனின் பெற்றோரிடம் பேசி பார்த்துள்ளனர். ஆனால், அப்போதும் அவர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்காமல் விடாப்பிடியாக இருந்துள்ளனர்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த வனிதா குடும்பத்தினர், “காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாகக் காவலர் திருமுருகன் மற்றும் திருமணம் செய்து வைக்க மறுக்கும் அவரது பெற்றோர்கள் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்” அளித்தார்.

இது தொடர்பாகக் காவலர் திருமுருகன் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரம் படைத்த போலீசார் ஒருவரே, தனது அத்தை மகளை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதோடு, திருமணம் செய்ய மறுத்து வருவது, அப்பகுதி மக்களிடையே, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விசயம், அந்த மாவட்டத்தின் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தெரிய வந்துள்ள நிலையில், காவலர் திருமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.