“தற்சுட்டி மையமா? தமிழ் அழிப்பு மையமா? ” என்று கேள்வியை முன்வைத்து, தமிழக அரசின் தமிழ் அழிக்கும் போக்கிற்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

நம்ம CHENNAI

இது தொடர்பாக தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் முழுநிலவன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 29.01.2021 அன்று சென்னை மெரினா கடற்கரையில், ராணி மேரி கல்லூரி எதிரே ”நம்ம CHENNAI” என தமிங்கில எழுத்துக்களால் ஆன தற்சுட்டி (செல்பி) மையத்தை திறந்து வைத்தார். அதில், CHENNAI ஆங்கில எழுத்துருக்களால் செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவு 24 லட்சம் ரூபாய்” என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

I LOVE KOVAI

அதே போல, “கடந்த 25.06.2020 அன்று கோவை உக்கடம், பெரியக்குளம் கரையில் “ I LOVE KOVAI” என்று ஆங்கில எழுத்துருக்களால் ஆன தற்சுட்டி மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்” என்றும், குறிப்பிட்டு உள்ளது.

I LOVE AVADI

“தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராசன் தனது தொகுதியான ஆவடியில், மாநகராட்சி அலுவலகம் அருகில்  “I LOVE AVADI” என்ற ஆங்கில எழுத்துருக்களால் செய்யப்பட்ட தற்சுட்டி மையத்தை திறந்து வைத்து தன் பங்குக்கு தமிழ் வளர்த்தார்” என்றும், கூறப்பட்டு உள்ளது.

I LOVE TRICHY

“திருச்சி கோட்டை புகைவண்டி நிலையம், மேற்கு பொலிவார்டு சாலையில் உரூபா 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மாநகராட்சி சார்பில் “I LOVE TRICHY” என்ற தற் சுட்டி மையம் அமைக்கப்பட்டுள்ளது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இதைப் போன்றே அரசின் திட்டங்கள் ஆங்கிலப் பெயர்களிலேயே வைக்கப்படுகிறது. ஊரக பகுதிகளில் தொடங்கப்படும் மருத்துவ மையங்களுக்கு அம்மா மினி கிளினிக் ( AMMA MINI CLINIC) என்றும், புதிய போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு வாகனங்கள் (AMMA PATROL GREATER CHENNAI) என்ற பெயர்களில் உலா வருகிறது” என்றும், அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதனால், “தமிழக அரசின் தமிழ் அழிக்கும் போக்கைக் தமிழ்க்கலை இலக்கியப் பேரவை சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” என்றும், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தெரிவித்து உள்ளது.

“உலக தாய்மொழி நாளான இன்று (1.02.2021) தற்சுட்டி மையங்களில் உள்ள ஆங்கில எழுத்துருக்களை அப்புறப்படுத்த வேண்டுமென்றும், ஆங்கிலப் பெயர்களில் உள்ள அரசுத் திட்டங்களின் பெயரை தமிழில் வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்” என்றும், அந்த தமிழ் அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது. 

“தமிழ் அழிக்கும் ஆளுங்கட்சியின் இந்த முடிவுகளை காத்திரமாகக் கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முழுவதும் “அனிதா அச்சீவர்ஸ் அகடமி அமைக்கப்படும் என்கிறார். தற்போது தனது கொளத்தூர் தொகுதியில் செயல்படும் தகுதித் தேர்வு மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சி மையத்தை ANAITHA ACHIVERS ACADEMY என்ற பெயரில் நடத்துவதும் கவலைக்குரியது.” என்றும், அந்த தமிழ் அமைப்பு கூறி உள்ளது.

“தமிழ் மீது ஆளுக்கொரு கை வாய்க்கரிசி என அதிமுகவும் - திமுகவும் அள்ளி வீசுவது கண்டிக்கத்தக்கது” என்றும், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.