கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

7 வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில், முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் சூப்பர்-12 சுற்று இன்று முதல் தொடங்கி உள்ளது. 

இந்த சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 இருக்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்று உள்ளன. 

அதே போல், குரூப் 2 ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நம்பியா ஆகிய அணிகளும் இடம் பெற்று உள்ளன. 

இதில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இறுதியில், லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்து மோதி விளையாடும்.

இந்த நிலையில் தான், சூப்பர் 12 சுற்றின் முதல் நாளான இன்று அபுதாபியில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. 

இந்த சூழலில் தான், மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 20 ஓவர் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான நாளையப் போட்டியில் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களுடன் களமிறங்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வீரர்கள் யாருக்கும் ஃபிட்னஸ் பிரச்னைகள் வராத பட்சத்தில், வார்ம்-அப் போட்டிகளில் விளையாடும் இதே டீம்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

அதன்படி, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், 11 பேர் கொண்ட அணியின் பட்டியலை அறிவித்து உள்ளார். 

அதன் படி, பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கட் கீப்பர்), ஃபாக்கர் ஜமான், ஹைதர் அலி, முகமது ஹஃபீஸ், மாலிக், அசிஃப் அலி, ஷதாப் கான் (துணை கேப்டன்), இமாத் வசீம், ஹாசன் அலி, ஷாஹென் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் ஆடும் அணியில் இடம் பெற்று உள்ளனர். 

குறிப்பாக, கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பையின் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் நேரடியாக கிரிக்கெட் போட்டிகள் விளையாட பிசிசிஐ மறுத்து வந்தது. 

அந்த வகையில், உலகக் கோப்பை சாம்பியன்டிராஃபி, ஆசியக் கோப்பை போன்று ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. 

இதன் தொடர்ச்சியாகவே, தற்போது 20 ஓவா் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளைய தினம் இந்தியா - பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற உள்ளதால், இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.