கோவையில்  பெண்கள் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதும் ஆட்கொண்டு வருகிறது. இதற்கிடையில், மழைக்காலம் என்னதால் ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றுடன் மக்களிடையே டெங்கு வைரசும் கடந்த சில தினங்களாக பரவி வருகிறது.

இந்நிலையில் கொரோனா, டெங்குவை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. கோவையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவருக்கும் , ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 63 வயது பெண்ணுக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

h1

இதையடுத்து கோவையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாநகராட்சி எல்லையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 எனவே மாநகராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தல்படி கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

h2

மேலும் வீட்டினை சுத்தமாகவும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மழைக்காலம் என்பதால் கோயம்புத்தூர் மாநகராட்சியில் தினந்தோறும் 64 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதனை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கேட்டுக்கொண்டுள்ளார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது, ‘இரண்டு பெண்களுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை 13 பேரையும் வெளியில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.  

இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, ‘கேரளாவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், அங்கிருந்து தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தவரால், ஒரு பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மற்றொருவருக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

பன்றிக் காய்ச்சல் பாதித்த பெண்கள் இருவருடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கும், தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று மற்றும் பன்றிக்காய்ச்சல் ஆகிய இரு வைரஸ் பரவலுக்கும் ஒரே மாதிரியான தடுப்பு பணிகள், பரிசோதனை முறைகளே பின்பற்றப்படுகின்றன’ இவ்வாறு தெரிவித்தனர்.