நவீன காலகட்டத்தில் மக்களும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றனர். வீட்டில் சமைத்து சாப்பிட கூடிய காலம் போய் தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐந்தே நிமிடத்தில் வாங்கி சாப்பிடக் கூடிய காலம் வந்துவிட்டது. இருப்பினும் ஊரடங்கு காலத்தில் இந்த நிலை பரவலாக குறையத் தொடங்கியது. 

தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், கொஞ்சம் கொஞ்சமாக சிலர் ஆன்லைன் ஆர்டர்களை ட்ரை செய்கின்றனர். நேரே சென்று சாப்பிட தயக்கம் இருப்பவர்களுக்கு, இந்த ஆன்லைன் ஃபுட் டெலிவரி ரொம்பவும் உபயோகமகாக இருக்கிறது. இந்நிலையில் சாலையோர உணவகங்களில் விரும்பக்கூடிய வாடிக்கையாளர்கள் சாலையோரம் சென்று தான் வாங்க முடியும். அந்த உணவுகள், ஆன்லைனில் கிடைப்பதில்லை. நேரே சென்று வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் விருப்பத்தை கருத்தில் கொண்டு, தற்போது ஸ்விக்கி நிறுவனம் ஒரு முக்கியமான முன்னெடுப்பை எடுத்துள்ளது. பிரபலமான ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி இந்தியா முழுவதிலும் பல்வேறு உணவு வகைகளை ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.  கொரோனா ஊரடங்கால் சாலையோர உணவகங்கள் மூடப்பட்ட நிலையில் இருப்பதால் ஸ்விக்கி நிறுவனம் மேம்பாட்டிற்காக மத்திய அரசு அந்நிறுவனத்துடன் கைகோர்த்து உள்ளது. இதில் ஒன்றாக சாலை ஓர உணவுகள் இனி ஸ்விக்கியிலும் கிடைக்கும் என புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக சென்னை, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான நகரங்களில் உள்ள சாலையோர உணவுகளுடன் இந்த ஆன்லைன் மூலமாக உணவு டெலிவரி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலையோர உணவக உரிமையாளர்கள் பயன் பெறுவதுடன் மக்களும் வீட்டில் இருந்தபடியே சாலையோர உணவைப் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் பொருளாதார நிலை மாறினாலும் தெருவோர வியாபாரிகளின் நிலை இன்னமும் அப்படியேதான் உள்ளது. கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விரைவில் சரிகட்ட முடியாத சூழல் உள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் (MoHUA) கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, நுகர்வோருக்கு ஆன்லைன் அணுகலை வழங்குவதற்கும், வணிகங்களை வளர்க்க உதவுவதற்கும் ஸ்விக்கி, தெரு உணவு விற்பனையாளர்களுக்கு தளம் அமைத்துக்கொடுக்கிறது.

இதற்கென பிரதம மந்திரி ஸ்ட்ரீட் வெண்டார்ஸ் ஆத்மிர்பர் நிதி (PM SVANidhi) திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆரம்பத்தில், இந்தத் திட்டம் அகமதாபாத், சென்னை, டெல்லி, இந்தூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் 250 நடைபெற்றது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு நவீன தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளை தெரு விற்பனையாளர்களுக்கு ஸ்விக்கி வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டம் வெற்றிகரமாக முடிந்ததும் இந்தத் திட்டத்தை நாட்டின் பல பகுதிகளிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் செயலாளர் சஞ்சய் குமார் மற்றும் ஸ்விக்கி தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் போத்ரா ஆகியோருக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் வீடியோ கான்பிரென்ஸ் மூலம் நடந்தது. அதில் MoHUA செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா, ஸ்விக்கி அதிகாரிகள் மற்றும் அகமதாபாத், சென்னை, டெல்லி, இந்தூர் மற்றும் வாரணாசி நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர். தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தெருவோர விற்பனையாளர்களுக்கு ரூ.10,000 வரை மூலதனக் கடனை வழங்குவதற்காக PM SVANidhi திட்டம் ஜூன் 1, 2020 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடன்கள் ஒரு வருடத்திற்குள் மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்தப்படுமாறு கூறப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 7% வட்டி மானியத்தை அளிக்கிறது. இது காலாண்டு அடிப்படையில் நேரடி நன்மை பரிமாற்றத்தின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உண்மையில் இந்தத் திட்டம் செயலுக்கு வந்து வெற்றிகண்டால் பல தெருவோர வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.