கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி , சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம். இதற்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் இன்று நடைபெற்றது.


வழக்கு விசாரணையின் போது, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறாமலேயே, திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டி இருக்கிறது. சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறாமல் நிலத்தை கையகப்படுத்திய தவறு. அவ்வாறு கையகப்படுத்திய நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஆனால் திட்டத்திற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருக்கிறது. 


உரிய நடவடிக்களுடன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கட்டுமான பணிகள் நடைபெறும் போது தான் சுற்றுசூழல் முன் அனுமதி தேவை தற்பொழுது தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக புதிய அரசாணையை வெளியிடுமாறும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த  உத்தரவு நிலம் கையகப்படுத்தலுக்கானது மட்டுமே. ஒட்டு மொத்த திட்டத்துக்கானது இல்லை.


அதனால்  சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தில்   நிலம் கையகப்படுத்துவதற்கான தடை மட்டுமே தொடரும்.  நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு சேலத்தில் சில பகுதியில் விவசாயிகள் பட்டாசு வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.