அனைத்துலக சிறந்த படைப்புக்கான விருதுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் என்றால், தெரியாத கலைஞர்களே இருக்க முடியாது. அவரது எழுத்துக்கள் தமிழக மக்களுக்கு அவ்வளவு பரிச்சயமானது. 

தமிழ் மீது அதீத ஆர்வம். தன் எழுத்துக்களோடு தமிழகத்தின் பண்பாட்டுக் கலாச்சாரங்களையும், நாகரீகத்தையும், கூடவே சக காலத்துச் சமூகப் பொறுப்புகளையும் 

சேர்ந்தே சுமப்பவர் தான், எழுத்தாளர் சு.வெங்கடேசன் என்றால், அதனை மறுப்பவர்கள் நிச்சயம் எவரும் இங்கே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவரது எழுத்துக்களின் வார்த்தைகள் பல பொறுப்புடைமைகளையும், பண்பாட்டு கலசத்தையும் பிரதிபலித்துக்கொண்டே இருப்பது அவரது புத்தகங்களைப் படிப்பவர்களுக்குத் தெரியும்.
 
இப்படியான சூழ்நிலையில் தான், மதுரை மக்களவை உறுப்பினராக எழுத்தாளார் சு.வெங்கடேசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். தற்போது, தமிழகத்திற்கான குரலாக இந்திய நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன், குரல் மிக கம்பீரமாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தான், மதுரை மக்களவை உறுப்பினரான எழுத்தாளர் சு.வெங்கடேசன், எழுதிய “வேள் பாரி” நாவலை அனைத்துலக சிறந்த படைப்பாக மலேசியாவைச் சேர்ந்த இலக்கிய அறவாரியம் என்கிற அமைப்பு தற்போது தேர்வு செய்து மகுடம் சூட்டியிருக்கிறது. 

அதாவது, மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” தேர்வு செய்திருக்கிறது. 

ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தரப்படும் இவ்விருதானது, பத்தாயிரம் அமெரிக்க டாலர்களைப் பரிசுத் தொகையாகக் கொண்டதாகும். இதன் இந்திய மதிப்பானது சுமார் 7 லட்சம் ரூபாய் ஆகும். இவ்விருது பற்றிய அறிவிப்பினை சங்கத்தின் நிர்வாக இயக்குநர் தத்தோ பா.சகாதேவன் தற்போது அறிவித்துள்ளார்.

மேலும், எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் எழுதிய அவரது முதல் நாவலான காவல் கோட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதினை அலங்கரித்து, அவரின் எழுத்துக்குக் கீரிடம் சூட்டியது. இதன் மூலம் அறிவு சார்ந்த தமிழ் சமூகத்தில் அவர் மேலும் அறியப்பட்டவராக மாறிப்போனார்.

தற்போது இவரது “வீரயுகநாயகன் வேள்பாரி” நாவலுக்கு மலேசியாவில் பெரும் வாசகர் வட்டம் இருப்பதும், மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப் புலனத்தின் பாடநூலாக “வேள்பாரி” நாவல் இருப்பதும் தமிழுக்கும், தமிழருக்கும் கிடைத்த பெருமையாகவே பார்க்கப்படுகிறது. 

அது போல், மலேசிய நாட்டின் சிறந்த படைப்பாக சை. பீர்முகம்மது எழுதிய “அக்னி வளையங்கள்” என்கிற நாவல் பெற்று உள்ளது.

அத்துடன், தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலமாக இருப்பதால், விருது விழா நடத்த முடியாத சூழவி வருகிறது. இதனால், விருது தொகை ஆசிரியருக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், தற்போது அந்த அமைப்பு கூறியிருக்கிறது. 

இதன் மூலம், தமிழின் பெருமை, தமிழனின் பெருமை இவ்வுலகம் மேலும் அறிய இந்த தருணம் மேலும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால், எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு உலகம் முடிவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.