ஜனவரி 20ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் நேரடித் தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.ponmudiகடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பல்வேறு தரப்பு மக்களையும் வாட்டி வருகிறது. இதற்கிடையில், கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால்,  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலமே செமஸ்டர் தேர்வும் நடைபெற்றது. இதில் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் தேர்வில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்நிலையில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.


தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் ஆன்லைன் கல்வியும் தொடர்கிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இதேபோல் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேரடி எழுத்துத் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக உயர் கல்வித்துறையானது முக்கிய உத்தரவை பிறப்பித்தது .

இதனைத்தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் நேரடித் தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கல்லூரி மாணவர்கள், தேர்வு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 11அமைப்பை சேர்ந்த மாணவர்கள்  பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
நேரடி தேர்வு எழுத வேண்டுமானால் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் கேட்டதால் அவர்களின் கோரிக்கை ஏற்று இரண்டு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டு  ஜனவரி 20 தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டே நேரடி தேர்வுகள் நடத்தப்படுவதாக  கூறிய அவர் மேலும் ஒட்டுமொத்த மாணவர்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் கூறினார். ஜனவரி 20ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் நேரடித் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி துறை அமைச்சர்  குறிப்பிட்டார்.

அதனைதொர்ந்து நேரடி தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் எனவும் மாணவர்களுக்கு உறுதி அளித்தார். மேலும் அனைத்து மாணவர்களும் தினசரி கல்லூரிக்கு வர வேண்டும் என்றும்  இந்த இரண்டு மாதங்களில் அனைத்து பாடங்களும் எடுக்கப்பட்டு  மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் எனவும் உயர் கல்வி துறை அமைச்சர்  தெரிவித்தார். 


அதன் பின்னர் செமஸ்டர் தேர்வுகள் நடைப்பெறும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மாணவர் சமூகத்திற்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் நன்றியை தெரிவித்து கொண்டார். மேலும்  மாணவர்களையும்,பெற்றோர்களையும் அழைத்து எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.