கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவக் கருவிகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தொடங்கி வைத்தார். 

இந்நிலையில், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி, பேறுசார் மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையங்கள், சீமாங்க் மையங்கள் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில மருத்துவமனையில் அதாவது அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக Autodelfia Maternal Analyzer என்ற மருத்துவக் கருவி தருவிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அதிநவீன முழு உடற்பரிசோதனை மையத்தில், சிறப்பு தனித் தொகுப்பாக, ஆரம்ப நிலை கரு பரிசோதனைக்கு 1000 ரூபாயும், இப்பரிசோதனையுடன் கர்ப்பிணித் தாய்க்கு கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள 2000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கர்ப்ப காலத்தில் அதாவது 11-14 வாரங்கள் இந்த பரிசோதனை செய்வதன் மூலமாக கரு மரபணு சார்ந்த பல பிரச்சனைகள் கண்டறியப்பட்டு, உடல் உறுப்பு ஊனத்துடன் குழந்தை வளர்வது தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.