“பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க இனி தனிக்குழு அமைக்கப்படும்” என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம் கடந்த 2 நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இது தொடர்பான செய்திகள் தான், கடந்த 2 நாட்களாக வைரலாகிக்கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும்” என்று, குறிப்பிட்டார். 

அத்துடன், “ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர் - மாணவர்கள் எவ்வாறு? எப்படி? செயல்பட வேண்டும் என்பது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிட இருக்கிறது” என்றும், கூறினார்.

மேலும், “பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியரை, கல்வி நிறுவனம் பணி இடை நீக்கம் செய்துள்ளது என்றும், ஆசிரியர்கள் மீதான பாலியல் புகாரானது, இனி தனி குழு அமைத்து விசாரணை நடத்த உள்ளோம்“ என்றும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

“ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும்,  பாலியல் புகார் குறித்து கல்வி நிறுவனம் சார்பில் குழு அமைத்து விசாரணை நடைபெறும்” என்றும், அவர் அமைச்சர் அன்பில் மகேஷ் சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில், “இனி நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளால் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் உறுதி அளித்தார்.

“நல்ல ஆசிரியர்களுக்கும் களங்கம் வரக்கூடாது என்பதற்காக, பாலியல் புகார் விவகாரத்தில் குழு அமைக்கப்படும் என்றும், பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு ஏற்கனவே உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

குறிப்பாக, “பள்ளிகளில் இனி பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு அமைக்கப்படும் தனிக்குழுவில், பெண் ஆசிரியர் ஒருவர் இதற்குத் தலைமை வகிப்பார் என்றும், விசாகா கமிட்டி அனைத்துப் பள்ளிகளிலும் உள்ளதா? செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதிப்படத் தெரிவித்தார். 

முக்கியமாக, “தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்த வரைவு அறிக்கை தயாராக உள்ளது என்றும், முதலமைச்சர் ஒப்புதலுக்குப் பிறகு அவை முறையாக மத்திய அரசுக்கு அனுப்பப்படும்” என்றும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

அதே போல், “தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்வு கூடாது என்பது அரசின் முடிவாக இருக்கிறது என்றும், ஆனாலும் நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் முடிவெடுக்கப்படும்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.