ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்து, அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, “அரசியலில் இனி ஈடுபடும் எண்ணம் இல்லை” என்று, நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2 ஆம் அலையாகப் பரவி தற்போது சற்றே ஓய்ந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், இந்த 2 ஆம் அலையாக கொரோனா பரவத் தொடங்கிய நேரத்தில், “என்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அரசியல் கட்சி தொடங்கும் முடிவைக் கைவிடுவதாக” தேர்தலுக்கு முன்பாகவே நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்திருந்தார். 

இதனையடுத்து, தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் பணிகளில் அவர் தீவிரம் காட்டி வந்தார்.

தற்போது, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இதனால், இன்று காலை முதலே பெரும்பாலான ரசிகர்கள் கோடம்பாக்கத்திற்குப் படையெடுத்துக் கிளம்பினார்கள். 

அதன் படி, நடிர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். 

அப்போது, “வருங்காலத்தில் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை” என்று, மக்கள் மன்ற நிர்வாகிகள் முன்பாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, “வருங்காலத்தில் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை என்றும், ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாகவும்” அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

இது தொடர்பாக நடிர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது என்றும், அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை” என்றும் குறிப்பிட்டு உள்ளார். 

“நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்” என்றும். அவர் நினைவு கூர்ந்து உள்ளார்.

அத்துடன், “கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை என்றும், வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை” என்றும், அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார். 

“ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள் , இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல, ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாகச் செயல்படும்” என்றும், உறுதிப்படக் கூறியுள்ளார்.

இதனிடையே, ரஜினிகாந்தின் இந்த முடிவை ஏற்பதாக, ரஜினி மன்ற நிர்வாகிகளும் அறிவித்து உள்ளனர். இது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.