“அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனரா?” என்று, சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ள நிலையில், “பத்திரிகையாளர்கள் கவனமாக செய்திகளைக் கையாள வேண்டும்” என்றும் அறிவுரை வழங்கி உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 4 ஆம் நாள் விவாதம் மற்றும் பதிலுரை இன்று காலை நடைபெற்றது. 

அப்போது, நேற்றைய சட்டசபை கூட்டத்தில் “கோடநாடு விவகாரத்தில்” சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டும், எதிர்ப்பு தெரிவித்தும் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்தனர். 

அதன் தொடர்ச்சியாக, “தமிழக அரசு பொய் வழக்கு போடுவதாக” கண்டன முழக்கங்களை எழுப்பி, சட்டசபை வளாகத்திலேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். 

அத்துடன், “2 நாட்களுக்கு சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம்” என்றும், அவர்கள் கூறியிருந்தனர். அதன்படியே, அதிமுக உறுப்பினர்கள் இன்றும் சட்டசபை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், இன்று சட்டசபை கூட்டம் காலையில் கூடியதும், முதலில் சபை முன்னவர் துரைமுருகன் எழுந்து, “நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகியிருக்கிறது என்றும், இது குறித்து பேரவையில் எடுத்துரைக்க விரும்புவதாகவும்” பேசினார். 

அதன் படி, தொடர்ந்து பேசிய துரைமுருகன், “சட்டசபையில் கூச்சல், குழப்பம் என்றும்,அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம் என்றும், ஊடகங்களில் செய்திகள் வந்திருப்பதாக” சுட்டிக்காட்டினார். 

மேலும், “இது தவறான செய்தி என்றும், அதிமுக வினர் வெளியேற்றப்படவில்லை என்றும், இது குறித்தான செய்தி வெளியிடும் போது பத்திரிகையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்றும், அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஜனநாயக முறையில் சட்டபேரவை கூட்டம் நடைபெற வேண்டும் என்ற கொள்கை கொண்டவர் முதலமைச்சர்” என்று, குறிப்பிட்டு பேசினார். 

அத்துடன், “மக்களுக்கான பிரச்சினைகளைப் பேச வேண்டிய சட்டசபையில், தனிப்பட்ட பிரச்சினைகளை எழுப்பக்கூடாது” என்றும், சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

“எனினும், எதிர்க்கட்சி தலைவரை சட்டசபையில் பேச அனுமதித்தேன் என்றும், ஆனால் என் அனுமதி பெறாமல் அதிமுக வினர் பதாகைகளை ஏந்தி கடும் கூச்சலிட்டனர்” என்பதையும், அவர் சுட்டிக்காட்ட தவறிவில்லை. 

குறிப்பாக, “அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பியதோடு, அவர்களாகவே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்” என்றும், குறிப்பிட்டு பேசினார்.

அதே நேரத்தில், “சட்டசபையில் வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள், பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்த முற்பட்டனர் என்றும், இதன் காரணமாகவே அங்கு உள்ளவர்களை அவை காவலர்கள் மூலமாக வெளியேற்றுமாறு நான் தெரிவித்தேன்” என்றும், சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.

முக்கியமாக, “நேற்றைய தினம் நடந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில், அதிமுக வினர் சட்டசபையில் பெரும் கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு, அவர்களாகவே வெளிநடப்பு செய்தனர் என்றும், இனி வரும் காலங்களில் ஊடகங்கள், பத்திரிகைகள் செய்திகளைக் கவனமாக கையாள வேண்டும்” என்றும், சபாநாயகர் அப்பாவு ஊடகங்களுக்கு அறிவுரை வழங்கினார்.