கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், உயிர் காக்கும் கருவிகள் மற்றும் வென்டிலேட்டர் வசதியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்பிபியின் உடல் நிலை கவலைக் கிடமாக இருந்த நிலையில், தற்போது சீராக இருப்பதாகவும், எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது.

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து தினசரி எம்ஜிஎம் மருத்துவமனையும் , அவரது மகன் எஸ்பிபி சரணும் தகவல் தெரிவித்து வந்தனர்.

சரண் கூறுகையில், அப்பாவின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவரது நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விரைவில் அவர் குணமடைவார் என்ற நம்பிக்கை உள்ளது. அப்பாவுக்கு தினசரி செய்தித்தாள் வாசித்து காண்பிக்கச் சொல்லியுள்ளேன்.

அதுபோன்று அவர் பாடிய பாடல்களும் அவர் சிகிச்சைப் பெறும் அறையில் ஒலிக்கப்படுகிறது. இதற்கு அவர் கைகளை அசைத்து தாளம் இடுகிறார். மயக்க நிலையிலிருந்து மீண்டு வருகிறார். சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு சுய நினைவுடன் இருக்கிறார். எதையோ என்னிடம் சொல்வதற்காக எழுத முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இந்த வாரத்திற்குள் எழுத்து மூலம் என்னிடம் பேசுவார் என்று நம்புகிறேன் என ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்.

25 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்பிபியின் உடல் நிலை தற்போது முன்னேறி வருவதாகவும், 95 சதவிகித சுயநினைவுடன் தற்போது அவரது உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தான் நலம்பெற பிரார்த்தனை மற்றும் கடினமாக முயற்சிகளை மேற்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் என்று எல்லோருக்காகவும் இவர் மூன்று வார்த்தைகள் கொண்ட கடிதத்தை தனது கைப்பட நேற்று எழுதி இருக்கிறார் .

அவருக்காக  அனைவருமே, பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில், மருத்துவர்களின் கடின முயற்சிக்குப் பிறகு அவர் சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், எஸ்பிபி எதையோ சொல்ல முயற்சித்துள்ளார். இதற்காக நேற்று அவரிடம் பேனா பேப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் லேசான கிறுக்கல்களுடன், ”லவ் யூ ஆல்”  என்று எஸ்.பி.பி எழுதி தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தனக்காக பிரார்த்தனை செய்த அத்தனை பேருக்கும் அன்பை தெரிவிக்கும் வகையில் இவ்வாறு எழுதியுள்ளார் எஸ்பிபி.

உயிர் பிழைப்பாரா எணும் மோசமான நிலைக்கு சென்ற எஸ்.பி.பியின் உடல்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அவரது ரசிகர்களை கடந்து ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் சற்று மகிழ்ச்சி அளித்துள்ளது.