“என்னை மோசடி செய்து ஏமாற்றிய புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை முன்னாள் டிஜிபி என்பதால், விசாரணை சாதகமாகலாம் என்றும், அதனால் இந்த மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்” என்றும், நடிகர் சூரி வலியுறுத்தி உள்ளார்.

நடிகர் சூரி - நடிகர் விஷ்ணு விஷால் இருவருமே “வெண்ணிலா கபடிக்குழு” படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுத் திகழ்ந்து அடுத்து அடுத்து இருவரும் சேர்ந்து நடித்ததால், அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். 

அப்போது, அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு “வீர தீர சூரன்” என்ற திரைப்படத்தை அன்புவேல் ராஜன் என்பவர் தயாரித்தார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், நடிகர் சூரி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ஒப்பந்தமாகிப் படப்பிடிப்புகள் நடைபெற்றன. அந்த படத்திற்கு, நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு உள்ளது. ஆனால், பேசப்பட்ட படி, அந்த சம்பளம் அவருக்கு வழங்கப்பட வில்லை. அது குறித்து சூரி பலமுறை கேட்டு உள்ளார். 

அப்போது, சம்பளப் பணத்திற்குப் பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் ஒன்று விலைக்கு வருகிறது என்றும், அதை வாங்கித் தருவதாகப் படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் கூறி உள்ளனர்.

அதன்படி, “2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணத்தைத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவிடம் நடிகர் சூரி கொடுத்ததாக” தெரிகிறது. 

இதனையடுத்து, அந்த பணத்திலிருந்து சூரிக்கு தர வேண்டிய 40 லட்சம் ரூபாய் பணத்தை, அந்த தயாரிப்பாளர் மீண்டும் சூரியிடம் கொடுத்து உள்ளார். ஆனால், அவர்கள் தருவதாகச் சொன்ன அந்த இடத்தை மட்டும் அவர்கள் தரவே இல்லை. கொடுத்த பணத்தையும் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததோடு மோசடி செய்துள்ளனர். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட நடிகர் சூரி, அவர்களிடம் மீண்டும் தன்னுடைய பணத்தைக் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து, சட்ட ரீதியான நடவடிக்கையை நாம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்த நடிகர் சூரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

ஆனால், போலீசார் இந்த புகாரைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நடிகர் சூரி, சிறிது காலம் காத்திருந்து உள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இனியும் தாமதம் செய்தால், இழந்த பணத்தை மீண்டும் பெற முடியாது என்று நினைத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்படி, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மீதும், சென்னை அடையார் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து உள்ளார். அதில், “என் மீதும் எனது தந்தை மீதும் பொய்யான குற்றச்சாட்டைப் படித்ததும் தனக்கு கடும் அதிர்ச்சியாகவும், வருத்தமாக இருந்ததாக” குறிப்பிட்டுள்ளார்.
 
“உண்மையிலேயே, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு நடிகர் சூரி தான் அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். அதாவது, எங்கள் நிறுவனம் சார்பில் “கவரிமான் பரம்பரை” என்ற படத்திற்காக, கடந்த 2017 ஆம் அண்டு சூரிக்கு பணம் கொடுக்கப்பட்டது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. உண்மை விரைவில் வெளிவரும். சட்டப்படி 
நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்றும், விஷ்ணு விஷால் விளக்கம் அளித்து இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, நடிகர் சூரிக்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த வழக்கில், 50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி இருப்பதால்,  இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனால், வரும் 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி, போலீசார் சூரிக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். 

இந்நிலையில், “என்னை ஏமாற்றி மோசடி செய்த நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால், அவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு” தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால், அவருக்கு எதிராக விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செயல்படுவதாகச் சூரி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இருவர் மீதான விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் நடிகர் சூரி தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, இருவரிடம் நடத்தப்பட்ட 
விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையைத் தள்ளி வைத்து உள்ளார்.