ஃபேஸ்புக் மூலமாக சுமார் 200 போலீஸ்காரர்களிடம் நட்பாக பழகி வந்த பலே கில்லாடி பெண் ஒருவர், போலீஸ்காரர்களுக்கு காதல் வலை விரித்து, பல லட்சம் ரூபாய்களை மோசடி செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்த 25 வயதான பாரதிராஜா என்பவர், இவர் மணிமுத்தாறில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு காவலராக பணியாற்றி வருகிறார். 

சிறப்பு காவலரான பாரதிராஜா,கடந்த 3 மாதங்களாக சென்னை திருவொற்றியூரில் உள்ள கடலோர காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். 

இந்த சூழலில், கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பாரதிராஜாவின் ஃபேஸ்புக் பக்கத்தில், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஐஸ்வர்யா என்ற பெண், நட்பாக அறிமுகம் ஆகி உள்ளார். 

இவர்கள், ஃபேஸ்புக் நட்பு இவர்களுக்குள் நாளடைவில் காதலாக மலர்ந்து உள்ளது.

அந்த நேரத்தில், “நான் மருத்துவம் படிப்பதாக” கூறிய அந்த பெண், அடிக்கடி செல்போன் மூலமாக பேசியும், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக சாட் செய்தும் வந்திருக்கிறார். 

முக்கியமாக, அந்த பெண் “காவலர் பாரதிராஜாவை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள்” கூறி பாராதிராஜாவின் மனதில் ஆசையை வளர்த்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, “என்னுடைய மருத்துவ படிப்பிற்கு பணம் தேவைப்படுவதாக கூறி, பாரதிராஜாவிடம் கேட்டு” பணத்தையும் பெற்றிருக்கிறார்.

அத்துடன், “எனது தந்தை பழனியின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துமாறு கூறி படிப்படியாக பாரதிராஜாவிடம் இருந்து கிட்டதட்ட 14 லட்சம் ரூபாயை ஏமாற்றி பெற்று” இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, பாரதிராஜாவின் உறவினரான மகேந்திரன் என்பவரிடம் ஃபேஸ்புக் பக்கத்தில் மற்றொரு பெண் போல் ஐஸ்வர்யா அறிமுகம் ஆகி பழகியுள்ளார். 

அப்போது, அதே பாணியில் மகேந்திரனை ஏமாற்றி அந்த பெண், அவரிடமிருந்து கிட்டதட்ட 20 லட்சம் ரூபாயை தந்தையின் வங்கி கணக்கு மூலம் அந்த பெண் ஐஸ்வர்யா பெற்றிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, மகேந்திரன் மூலமாக ஒரு சவரன் தங்க நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் அந்த பெண் ஏமாற்றி பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் தான், கடந்த ஒரு மாதமாக பாரதிராஜா, மகேந்திரன் ஆகிய இருவரிடமும் பேசுவதை ஐஸ்வர்யா திடீரென்று நிறுத்திக்கொண்டார்.

இதனால், சற்று சந்தேகம் அடைந்த பாரதிராஜா, மகேந்திரன் ஆகிய இருவரும், ஐஸ்வர்யா பற்றி விசாரித்து உள்ளனர். 

அப்போது, அந்த பெண் வேறு வேறு பெயர்களில் பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோரை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாரதிராஜா, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆவடி காவல் துணை ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, ஐஸ்வர்யாவின் செல்போன் எண்களைக் கொண்டு அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார், ஐஸ்வர்யா மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். 

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், “ஐஸ்வர்யா ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருவது” தெரிய வந்தது.

அத்துடன், ஒரு செல்போன் மற்றும் ஒரு லேப்டாப்பை வைத்து கொண்டு தான் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் பணியாற்றி வருவதாக தாய் தந்தையிடம் பொய் கூறி வந்திருக்கிறார்.

குறிப்பாக, ஃபேஸ்புக் மூலமாக பல ஆண் நண்பர்களிடம் தொடர்ந்து பழகி, இப்படியாக மோசடியான வகையில் பணத்தை பறித்து மிகப் பெரிய வகையில் வசூல் வேட்டை நடத்திய வந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

முக்கியமாக, “ஃபேஸ்புக்கில் இளம் வயது போலீஸ்காரர்களை மட்டும் நண்பர்களாக்கி, அவர்களிடம் தான் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக” கூறி மிகப் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

மிக முக்கியமாக, “பாரதிராஜா மற்றும் மகேந்திரனிடம் மோசடி செய்த 34 லட்ச ரூபாய் பணத்தில் அந்த பெண், மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததாகவும்” கூறப்படுகிறது.

இப்படியாக, இந்த இளம் பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தில் கிட்டதட்ட 200 போலீஸ்காரர்கள், இந்த இளம் பெண்ணிடம் நண்பர்களாக உள்ளதும், அதனை வைத்தே இந்த பெண் மிகவும் துணிச்சலாக போலீசாயே நம்ப வைத்து மோசடியாக பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, இளம் ஆண் போலீஸ்சாரை குறி வைத்து, இளம் பெண் ஒருவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.