74 வயதாகும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு, கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து அவர் சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்த நிலையில், ``2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன். ஆகவே யாரும் பயப்பட வேண்டாம்” என்று கூறியிருந்தார் அவர்.

இந்த நிலையில், கடந்த 13-ந்தேதி நள்ளிரவு நேரத்தில் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்திருக்கிறது. உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக ஆகியிருக்கிறது. அதன் காரணத்தால், அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில்  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் வெளியாகியிருக்கும் அறிக்கையில், ``கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார்" எனக்கூறப்பட்டுள்ளது. எஸ்.பி.பி. அவ்வப்போது கண்விழிப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நுரையீரல் தொற்றுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சீக்கிரமே உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். 
பல பிரபலங்களும் கூட தங்களின் பிராத்தனைகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், ’எஸ்.பி.பியின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் அதற்காக எக்மோ சிகிச்சையும் தொடர்ந்து வருகின்றது. நீண்ட நாள் சிகிச்சை தேவை என்பதால் மூன்றாவது மாடியில் உள்ள MICU தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி, தற்போது அவருக்காக பிரத்யேகமாக மருத்துவமனையின் ஆறாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ள வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எஸ்.பி.பியின் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் Vitals சீராக இருந்ததாலும் செயற்கை சுவாசம் கொடுக்கும் அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் தான் உள்ளார்’ என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நேற்றைய தினம் எஸ்.பி.பி.யின் மகன் சரண், தன்னுடைய தந்தை குறித்து விளக்கமளித்து வீடியோவொன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், ‘நேற்று, தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. நேற்றைவிட இன்று அவரது உடல்நிலை சீராக உள்ளது. காலையிலிருந்து நிறைய ஃபோன்கால்கள் வந்தன. எதற்கு பதில் அளிக்காததற்கு வருத்துகிறேன். அப்பாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. செய்ற்கை சுவாத்தில் இருக்கும் அவரது நுரையீரல் சிறப்பாக செயல்படுகிறது.

மருத்துவரின் கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை மெல்ல மெல்ல தேறிவருகிறது. அவரது உடல்நிலை மெதுவாகத்தான் குணமடையும். உங்களுடைய வேண்டுதல்கள் நிச்சயம் உதவும். உங்களுடைய அன்புக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் செய்தியில், ``எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்தேன். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன்" என நேற்று பதிவிட்டிருந்தார்.

அனைத்து சூழல்களையும் சமாளித்து, இசைஞாணி சொன்னது போல, அவரின் பாலு விரைவில் எழுந்து வர நாமும் பிராத்திப்போம்!