சிங்காரச் சென்னை 2.0 திட்டம் தொடக்கப்படும் என்றும், தமிழ்நாட்டில் பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்” என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. அதன் படி, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து தொடர்ந்து உரையாற்றினார்.

அதன் படி, “சென்னையில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அழிக்கப்பட்டு சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 'சிங்காரச் சென்னை 2.0 திட்டம்' தொடங்கப்படும்” என்று, அறிவித்தார்.

இந்த திட்டத்தின் படி, “குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கு வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க வழிவகை செய்யப்படும் என்றும், தமிழகத்தில் உள்ள 79,395 கிராமங்களுக்கு தினசரி ஒரு நபருக்கு 55 லிட்டர் சுகாதார குடிநீர் வழங்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும்” அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

“தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு 3954.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும், புதிய பெருநகர வளர்ச்சி குழுமங்கள் மதுரை, கோவை, திருப்பூர் பகுதி வேகமாக வளர்ந்து வரும் ஒசூர் பகுதிக்கு ஏற்படுத்தப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

“சீர்மிகு நகர திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அம்ருத் திட்டத்திற்கு 1,450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும்” நிதி அமைச்சர் அறிவித்தார்.

முக்கியமாக, “ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க 623.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க 703 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து துறைக்கு டீசல் மானியமாக 750 கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்”  பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

அத்துடன், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது என்றும், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்” என்றும், அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், “சென்னை நகரில் 3 இடங்களில் அதாவது கணேஷபுரம் சுரங்கப் பாதையின் மேல், கொன்னூர் நெடுஞ்சாலை - ஸ்ட்ராண்ச் சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் ஆகிய பகுதிகளில் 135 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும், இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றும், பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

மேலும், “சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மொத்தம் 150 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, கடல் பாசி வளர்ப்பு மீன் வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரின வளர்ப்பு உள்ளிட்ட மாற்று வாழ்வாதாரம் திட்டங்களும் ஊக்குவிக்கப்படும் என்றும், மீனவர்களின் நலனுக்காக ஒட்டு மொத்தமாக 1149.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டு பேசினார்.

அத்துடன், “திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் ஏற்படுத்தப்படும் என்றும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

“ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் மாற்றி அமைக்கப்படும் என்றும், போக்குவரத்து ஆணையரகம் 'போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்' என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும், இந்த திட்டத்தை செயல்படுத்த பல்வேறு துறைகளுக்கு 500 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்றும், அவர் கூறினார்.

“தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா அமைக்கப்படும் என்றும், இதற்கு முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம் வேலூர் திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்” என்றும், அவர் உறுதி அளித்தார்.

அதே போல், “தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை தருமபுரி திருநெல்வேலி விருதுநகர் சிவகங்கை விழுப்புரம் நாமக்கல் தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, “கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானதாக” சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சந்திக்கும் பெரும் நிதி இழப்புகள் முற்றிலும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார். 

இதனால், “மின்வாரியத்தின் கழக நிறுவனங்கள் நொடித்துப் போவதிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் வாயிலாக மாநிலத்தில் 17,980 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

முக்கியமாக, “பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவிற்கு குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்றும், இதன் மூலமாக உழைக்கும் வர்க்கத்தினருக்கு பேருதவியாக இருக்கும்” என்றும், அவர் பேசினார்.

“இலவச ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்படும்” உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நிதியமைச்சர், தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.