எஸ்.ஐ.வில்சன் கொலையில், இத்தாலியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும், கேரளாவில் தயாரிக்கப்பட்ட பட்டாக் கத்தியும் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கேரளா எல்லையான களியக்காவிளை அருகில் உள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் காவல் உதவி ஆய்வாளர் 55 வயதான வில்சன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். 

SI Wilson murder gun designed in Italy

அப்போது, 2 மர்ம நபர்கள் அவர் மீது, 3 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

அத்துடன், அங்குள்ள சிசிடிவி காட்சியின் மூலம் துப்பாக்கியால் போலீசாரை சுட்டுக்கொன்றது தவ்பிக், அப்துல் சமீம் ஆகியோர் தான் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் தான் குற்றவாளிகள் என்று கூறி, அவர்களுடைய புகைப்படத்தையும் போலீசார் வெளியிட்டனர்.

SI Wilson murder gun designed in Italy

இதனிடையே, தனிப்படை போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தவ்பிக், அப்துல் சமீம் ஆகிய இருவரையும் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் வைத்து, போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் தமிழகம் கொண்டுவரப்பட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், எஸ்.ஐ.வில்சனை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கேரள மாநிலம் கொச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் தூக்கி வீசப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், அங்கிருந்து துப்பாக்கி மீட்கப்பட்டது.

 SI Wilson murder gun designed in Italy

அதேபோல், வில்சன் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி திருவனந்தபுரம் அடுத்துள்ள தம்பானூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓடையில் தூக்கி வீசப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்து, கத்தியையும் போலீசார் மீட்டனர்.

பின்னர் இரண்டையும் பரிசோதித்த போலீசார், துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தனர். குறிப்பாக, மீட்கப்பட்ட துப்பாக்கியில் 5 குண்டுகள் இருந்தது என்றும், இந்த ரகத் துப்பாக்கி இத்தாலி ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது என்பது தெரியவந்துள்ளது.

மேலும், பட்டாக் கத்தியானது கேரளாவில் தயாரிக்கப்பட்டது என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, இந்த துப்பாக்கி இந்த பயங்கரவாத அமைப்புகளின் கையில் எப்படிக் கிடைத்தது என்பது குறித்து, தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.