சென்னை சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் 5 அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவருக்கு தற்போது மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

சென்னை அடுத்து உள்ள செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக, புகார் அளிக்கப்பட்ட நிலையில், சென்னை மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 

இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவான சிவசங்கர் பாபாவை தேடி வந்த நிலையில், டெல்லியில் பதுங்கியிருந்த அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

அப்போது, அவர் தன்னுடைய அடையாளத்தை மாற்றும் விதமாக, மொட்டை அடித்த நிலையில் இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவை, தமிழகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துவதற்கான வாரண்டை நீதிபதி விபுல் சந்த்வார் வழங்கினார். 

இதையடுத்து, சிவசங்கர் பாபாவை விமானம் மூலம் சிபிசிஐடி போலீசார் சென்னை அழைத்து வந்தனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில்
வைத்து போலீசார் அவரிடம் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தினர். அவரிடம்  5 அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக விசாரணை
நடத்தினர்.

அத்துடன், சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டு உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீசார் தற்போது முடிவு செய்திருக்கிறார்கள். 

மேலும், அவரிடம் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் முன், அவரை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, தனிப்படை போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

அதே நேரத்தில், கேளம்பாக்கத்தில் உள்ள சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் சிபிசிஐடி போலீசார் 6 மணி நேரத்திற்கு மேல் சோதனை செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக, சுஷில் ஹரி பாபாவின் லீலைகள் அம்பலமானதால் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த மாணவர்களை வேறு பள்ளியில் சேர்த்திடவும், சம்மந்தப்பட்ட இந்த பள்ளியை அரசே ஏற்று நடத்தவும் குழந்தைகள் நலக் குழுமம் வலியுறுத்தி உள்ளது. 

இதனிடையே, சாமியார் போர்வையில் மோசடி நடைபெற்றுள்ளதால், “மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று, தமிழக அரசுக்கு நடிகர் மயில்சாமி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.