அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், பாலியல் புகாருக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆதாரம் கேட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி ஒருவர், கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டு படிக்கும் போது அங்குள்ள சக மாணவர்கள் மற்றும் பேராசியரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த ஆராய்ச்சி மாணவி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் POSH கமிட்டியிடம் சென்று, புகார் அளித்திருக்கிறார். ஆனால், அந்த மாணவி கொடுத்த பாலியல் புகாரை, மாணவிகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் போஸ் (POSH ) கமிட்டியானது, விசாரிக்க மறுத்துவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி கவலைத் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிகளுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார் அளித்தும், இது வரை முறையான விசாரணையை ஒரு முறை கூட நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டு உள்ளது.

அதற்கு காரணம், “நீங்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நாட்களில் புகாரை கொடுக்காமல், காலம் கடந்து, பல நாட்கள் சென்ற பிறகு புகார் அளிப்பதால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று, போஸ் (POSH ) கமிட்டி கூறியதாகவும், அந்த மாணவி வேதனை தெரிவித்து உள்ளார்.    

குறிப்பாக, “என்னைப் போன்று பல ஆராய்ச்சி மாணவிகளும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்” அந்த மாணவி குற்றம்சாட்டி உள்ளார். 

அதே நேரத்தில், தமிழகத்தின் சில முக்கிய பள்ளிகளில் கடந்த காலங்களில், சக பள்ளி ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகள், தற்போது முன் வந்து புகார்கள் அளித்து வரும் நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான பல ஆசிரியர்களும் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி, இந்த பாலியல் விவகாரத்தை, தற்போது மீடியாவின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். 

அதன் படி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீதான பாலியல் புகாருக்கு, அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் என்னிடத்தில் ஆதாரம் கேட்பதாகவும்” அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டு உள்ளார்.

அத்துடன், “ஒரு கையெழுத்துக்கு அட்ஜஸ்ட்மெண்ட்” கேட்கப்படுவதாகவும், சம்மந்தப்பட்ட மாணவி புகார் கூறியுள்ளார்.

இந்த நிலையில், “பாதிக்கப்பட்ட மாணவி, உரிய ஆதாரத்துடன் மீண்டும் புகார் அளித்தால், நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்” என்று, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தற்போது பதில் அளித்துள்ளார். 

இதனிடையே, புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், பாலியல் புகாருக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது ஆதாரம் கேட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.