சென்னையில் மற்றொரு பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அவர் பள்ளியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் 59 வயதான ராஜகோபாலன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்து புகாரில் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளி மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு வந்ததாகவும், இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பல முறை மாணவிகளும், பெற்றோரும் புகார் அளித்தும், யாரும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றும் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி பாலியல் விவகாரம் ஒரு பக்கம் பல அதிர்ச்சிகளைக் கிளப்பிக்கொண்டு இருக்க, தற்போது சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீது புதிதாக பாலியல் புகார் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, பத்ம சேஷாத்திரி ஆசிரியர் பாலியல் தொல்லை விவகாரத்தில், சென்னை காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள் என சுமார் 40 பேர் தங்கள் ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக புகார் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. 

இதில், சென்னையில் இருந்து மட்டும் 10 மாணவிகள் பாலியல் புகார் கூறியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி சென்னைக்கு மட்டும் அதிகாரி என்றாலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த சக பள்ளி மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்களும் புகார்களை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதே போல், சென்னையில் 10 பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவிகளும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 20 பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து, அதில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பெயர் மற்றும் அவர் தொடர்பான விவரங்களையும் குறிப்பிட்டும் புகார் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

இப்படியாக, புகார்கள் பெறப்பட்ட பள்ளி, கல்லூரியின் பெயர்களையும், ஆசிரியர்களின் பெயர்களையும் போலீசார் பட்டியலிட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில், புகார்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான், மாணவிகள் பாலியல் புகார்கள் தொடர்பாக சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்தன் என்பவர் மீதும், அவரிடம் படித்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் புகார் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் ஆனந்தனை, சஸ்பெண்ட் செய்து, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

அதாவது, மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஆனந்த்துக்கு எதிராக முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். 

அதன் தொடர்ச்சியாக, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும் சேர்ந்து, குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு கடிதம் எழுதி தங்களது குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார்கள்.

அதன் அடிப்படையில், ஆசிரியர் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரியவந்திருக்கிறது. 

அத்துடன், இந்த புகார் தொடர்பாக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை நடக்கும் வகையில் குழு அமைக்கப்படும் எனவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.