பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

 இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் நூற்றுக்கணக்கான கேள்விகளைத் துருவி துருவி கேட்டு விசாரணை செய்தனர்.

முக்கியமாக, 5 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்து அதற்குப் பதில் அளிக்கும்படி ராஜகோபாலனிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும், 

இதில் சுமார் 250 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளிக்கும்படியும் போலீசார் கூறியதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியானது. 

இந்த விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை சூம் zoom செய்து, ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து ரசித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதன் மூலமாக ஆசிரியர் ராஜகோபாலுக்கு அதிகப்படியான தண்டனை பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

அதன் தொடர்ச்சியாக, பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கக் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

அத்துடன், மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 25 ஆம் தேதி ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதனையடுத்து, ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவரது மனைவி சுதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனுவில், “கடந்த 2015 ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார் அளித்து உள்ளார் என்றும், ஆனால் அப்போது ஆன்லைன் வகுப்புகள் நடக்கவில்லை என்றும், தாமதமாக அளிக்கப்பட்ட புகார் மற்றும் செவிவழி தகவலின் அடிப்படையில் என் கணவர் மீது குண்டாஸ் போடப்பட்டு உள்ளது என்றும், இது சட்ட விரோத நடவடிக்கை” என்றும், அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், “சுதாவின் மனு மீது, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரும் அடுத்த 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு” வழக்கை ஒத்தி வைத்தனர். 

இதனால், இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரி்ன் நடவடிக்கையை பொறுத்தே அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.