கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஏற்கெனவே 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

சம்பவ இடத்தில தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் தீபாவளிக்கு தயார் நிலையில் இருந்த வெடி பாக்ஸ்கள் வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில்துறை அமைச்சரும், அந்த மாவட்டத்தை சேர்ந்தவருமான எம்.சி.சம்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், இதர நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடலூர், காட்டுமன்னார்கோவில் குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காந்திமதி, மலர்கொடி, லதா, ராசாத்தி, சித்ரா, ருக்மணி மற்றும் ரங்கநாதன் என்பவரின் மனைவி ரத்தினம்மாள் ஆகிய ஏழு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்யவும் தொழில்துறை அமைச்சருக்கும், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசியிருக்கும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ``கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குருங்குடி கிராமத்தின் அருகே உள்ள இடைநாறூர் என்ற பகுதியில் பட்டாசு தயாரிப்பதைக் குடிசைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர். இங்கு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 7 பேர் உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

சம்பவ இடத்திலேயே 5 பேர் மரணம் அடைந்தார்கள் என்றும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் 2 பேர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் சொல்கின்றன. உயிரிழந்த 7 பேரும் பெண்கள். அதில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக நான்கு மாதங்கள் வருமானம் இல்லாமல் இருந்த தொழிலாளர்கள், தொழிலை மீண்டும் தொடங்கிய அன்றே இத்தகைய விபத்தில் சிக்கியது வேதனை தருவதாக உள்ளது. முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்ட பட்டாசு உற்பத்தியாக இருந்தாலும் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.