“சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் கூறியதில் தவறில்லை” என்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த சனிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியயோர் வருகை தர உள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கோரி ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மனு அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக அங்கு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், “ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே முரண்பாடு இருப்பது ஏன்?” என்று, எடுத்ததுமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“சசிகலா விவகாரத்தில் அதிமுகவில் சர்ச்சையே கிடையாது என்றும், பழுத்த மரத்தில்தான் கல்லடி படும்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் கருத்து சொல்லவில்லை என்றும், அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தை தான் ஒருங்கிணைப்பாளர் சொன்னார் என்றும், அதில் என்ன தவறு இருக்கிறது?” என்றும், செல்லூர் ராஜு எதிர் கேள்வியை கேட்டார்.

அத்துடன், “ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கூறியதில் தவறு எதுவும் இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்று தான் ஓபிஎஸ் கூறினார்” என்றும், அவர் விளக்கம் அளித்தார். 

“அது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால், பிற நிர்வாகிகளும் அதற்கு எதிர் கருத்து தெரிவித்து உள்ளனர் என்றும், அந்த கருத்துக்களை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை” என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும், “மதுரை மாவட்ட வளர்ச்சிக்காக அதிமுக ஆட்சியை போல் தற்போதைய திமுக ஆட்சியிலும் கூடுதல் நிதி பெற்று புதிய பணிகள் மேற்கொள்ள மதுரையைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மதுரை மாநகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை திட்டங்களை மேம்படுத்த வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த சூழலில் தான், தொண்டர்களை சந்திக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, இன்று மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், மருதுசகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவிக்கும் சசிகலா, அதனைத் தொடர்ந்து தொண்டர்களை சந்தித்து பேச உள்ளது  குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்க வேண்டும்” என்று, சென்னையில் புகழேந்தி ஆவேசமாக பேட்டி அளித்து உள்ளார்.