பெகாசஸ் உளவு சர்ச்சை விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 

இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 300 இந்தியர்களின் போன்கள்
ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, ஒட்டுமொத்த அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியிருக்கிறது. 

இதனால், இந்திய அரசியலில் தற்போது அனல் பறக்கும் விவாதங்கள் இது தொடர்பாக நடந்து அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. 

பெகாசஸ் என்னும் உளவு மென்பொருள் விவகாரம் சர்வதேச அளவில் மிகப் பெரிய பூகம்பமாக வெடித்து உள்ளது. 

THE WIRE உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் ஆய்வில், “இந்தியாவைச் சேர்ந்த பலரது செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கக்கூடும்” என்று, தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பிற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் பெரிய சர்ச்சைக்கு வித்தி்ட்டிருக்கிறது.

இந்த உளவு மென்பொருளால், பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் பெயர்களும் இருப்பதாக கூறப்படுவது தான், ஜனநாயக நாட்டில் மிகப் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2019 ஆம் ஆண்டு பயன்படுத்திய செல்போன் எண், பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் பட்டியலில் உள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இது தொடர்பாக கருத்து கூறியுள்ள சீமான், “தான் கண்காணிக்கப்பட்டது முன்பே தெரியும் என்றும், இது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்றும், கவலைத் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், பெகாசஸ் மென்பொருள் மூலமாக மே 17 இயக்கத்தின் ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் பெயரும் இடம் பிடித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும், “தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கே.ராமகிருஷ்ணனும் செல்போனும் வேவு பார்க்கப்பட்டிருக்கலாம்” என்றும், கூறப்படுகிறது.

“இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தில் அரசாங்கம் மக்களிடம் கூறி விட்டு, அவர்களை கண்காணித்த நிலையில் இது எமர்ஜென்சியை விட மிக மோசமான காலம்” என்று, ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அதே போல், திராவிடர் கழக பொருளாளர் குமரேசனின் செல்போன் எண்ணும் வேவு பார்க்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதாவது, என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக, வேவு பார்க்க அறிவுறுத்தப்பட்ட 50 ஆயிரம் செல்போன் எண்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது என்றும், ஆனால் இந்த எண்கள் அனைத்துமே ஒட்டுக்கேட்கப்பட்டதா என்கிற விவரம் பற்றிய தகவல் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அத்துடன், என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளர் யார் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி இருந்தார். இதனால், இது இன்னும் பல சந்தேகங்களை எழுப்பியது.