“கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடாமல், திருவொற்றியூருக்கு தாவியது ஏன்?” என்பது குறித்து, சீமான் விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழகமே தேர்தல் திருவிழாவைக் கொண்டாடி வரும் இந்த சூழ்நிலையில், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளன. 

இந்த நிலையில், எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் முதல் ஆளாக கடந்த மார்ச் 7 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார். 

அதில், ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் இடம் பெற்றிருந்தனர். அதன் படி, 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்களும் சம அளவில் இடம் பெற்றிருந்தனர்.

அதே நேரத்தில், தேர்தலுக்கு முன்பே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்றும், சீமான் அப்போது கூறியிருந்தார். 

ஆனால், வேட்பாளர்கள் அறிவிப்பில், சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். 

இந்த நிலையில், “நான் ஏன் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடவில்லை என்றும், திருவொற்றியூர் தொகுதியைத் தேர்வு செய்தது ஏன்?” என்றும், தற்போது சீமான் விளக்கம் அளித்து உள்ளார்.

அந்த விளக்கத்தில், “என்னுடைய கட்சி தொண்டர்கள் தான், நான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடக் காரணம்” என்று, குறிப்பிட்டுள்ளார். 

சென்னை எண்ணூரில் வரவிருக்கும் அதானியுடைய துறைமுக விரிவாக்கத் திட்டத்தால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இப்போதே, அந்த பகுதி மக்கள் வாழ்விடமாக இல்லை என்றும், அங்கிருக்கும் மீனவ குடிகளை  வெளியேற்றியிருக்கிறார்கள்” என்றும், 6111 ஏக்கரில் புதிதாக ஒன்றையும் தொடங்க முடியாது என்றும், ஆனால் விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்று அதானியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்” என்றும், கூறியுள்ளார். 

“எனக்கு ஓட்டு கேட்பதை விட, நாட்டைக் காப்பது தான் எனக்கு இப்போது முதன்மையானதாகத் தோன்றுகிறது” என்றும், அவர் பதில் அளித்து உள்ளார். 

அத்துடன், “இந்த பிரச்சனையை, மக்களுடன் களத்தில் நின்று பேசி தெளிவுபடுத்தவே நான் அந்த தொகுதியைத் தேர்வு செய்திருக்கிறேன்” என்றும், அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், “நான் நினைத்தால், காரைக்குடியில் போட்டி போட்டிருப்பேன் என்றும், அங்கு பாஜக, காங்கிரஸ் போட்டியிடும் அவர்களை எதிர்த்து நின்றால், இந்த மண்ணின் மைந்தனாக நான் தான் வெற்றி பெற்றிருப்பேன்” என்றும், சீமான் தெரிவித்துள்ளார். 

சீமானின் இந்த விளக்கம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.