கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற பெண், 35 நாட்கள் அடைத்து வைத்துக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம், பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இப்படி ஒரு கொடூர சம்பவம், வட மாநிலத்தில் நிகழ வில்லை. நமது தமிழ் நாட்டில் தான் அரங்கேறியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்து உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலமாகப் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், தானும் செல்போனில் ஆன்லைன் பாடம் படிக்க விரும்பி, தனது பெற்றோரிடம் செல்போன் கேட்டு அடம் பிடித்து உள்ளார்.

ஆனால், அந்த சிறுமியின் பெற்றோரிடம் செல்போன் வாங்கித் தரும் அளவுக்கு வசதி இல்லை என்பதால், அவர்கள் வாங்கித் தராமல் இருந்து உள்ளனர். இதனால், தனது பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு அந்த 17 வயது சிறுமி வெளியேறி உள்ளார்.

பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, எங்குச் செல்வது என்று தெரியாமல், பரமக்குடி பேருந்து நிலையத்தில் இங்கும் அங்குமாக சுற்றித் திரிந்துகொண்டு இருந்து உள்ளார். அப்போது, அந்த சிறுமியை கவனித்த அங்குப் பழ வியாபாரம் செய்து வரும் நீலாவதி என்ற பெண், சிறுமியிடம் வந்து மெல்லப் பேச்சுக் கொடுத்து, சிறுமியின் பிரச்சனை தெரிந்துகொண்டு, “உனக்கு நான் செல்போன் வாங்கித் தருகிறேன்” என்ற ஆசை வார்த்தைகள் கூறி, ஆட்டோவில் அழைத்துச் சென்று உள்ளார்.

அப்போது, “என்னை எனது பெற்றோர்கள் தேடுவார்கள்” என்று, சிறுமி கூறவே, அதற்கு “கோவையில் ஒரு தோழி வீட்டிற்கு வந்திருப்பதாகவும், இங்கு வேலைக்கு சேரப் போவதாகவும் பெற்றோரிடம் பொய் சொல்ல” வைத்திருக்கிறார் நீலாவதி.

அதன் படி, வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுது நேரத்தில், தனது பெற்றோரின் செலபோன் எண்ணுக்கு தொடர்புகொண்ட அந்த மாணவி, “நான் என் தோழியுடன் கோவைக்கு வேலைக்கு செல்கிறேன் என்றும், அதனால் என்னை நீங்கள் தேட வேண்டாம்” என்றும், கூறி உள்ளார். அதன் பின், அந்த சிறுமியின் பெற்றோர்கள், தங்கள் மகளை தேடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அங்குள்ள ஒரு வீட்டில் அந்த 17 வயது சிறுமியை அடைத்து வைத்து, நீலாவதியும் அவரைச் சார்ந்தவர்களும் அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து, நாசம் செய்து உள்ளனர். அத்துடன், அந்த சிறுமியை அடித்துத் துன்புறுத்திக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் செய்ய வைத்து, பணம் சம்பாதித்து வந்து உள்ளனர். இப்படியாக, அந்த சிறுமி 35 நாட்கள், அந்த நரக வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடையவே, பயந்துபோன அந்த கும்பல், அந்த சிறுமியை மீண்டும் பரமக்குடி பேருந்து நிலையத்திலேயே விட்டு விட்டுத் தப்பிச் சென்று உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 35 நாட்கள் கழித்து, அந்த 17 வயது சிறுமி மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பி உள்ளார். ஆனால், அந்த சிறுமியின் உடல் மிகவும் மெலிந்து சோர்வாகக் காணப்பட்டு உள்ளது. அவரது உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

சிறுமியைப் பார்த்துப் பதறிப் போன அவரது பெற்றோர், தங்களது மகளை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிறுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், சிறுமி கடுமையான பாலியல் அத்து மீறிலில் மாட்டி, பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக பெற்றோர்களிடம் தகவல் கூறிவிட்டு, அங்குள்ள காவல் நிலையத்திற்கும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, எங்குச் செல்வது என்று தெரியாமல், பரமக்குடி பேருந்து நிலையத்தில் இங்கும் அங்குமாக சுற்றித் திரிந்துகொண்டு இருந்த போது, அந்த பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வரும் நீலாவதி என்ற பெண், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, ஏமாற்றி ஆட்டோவில் அழைத்துச் சென்று, பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியது தெரிய வந்தது. 

இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், பரமக்குடி கருணாநிதிபுரத்தைச் சேர்ந்த நீலாவதி, காளையார்கோவிலைச் சேர்ந்த பஞ்சவர்ணம், ஆட்டோ ஓட்டுநர் முனீஸ்வரன் ஆகியோரை முதற்கட்டமாக போலீசார் கைது செய்து உள்ளனர். அத்துடன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.