திருப்பத்தூர் அருகே காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை, ஒரு தலையாய் காதலித்து வந்த கல்லூரி மாணவன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததால், அவமானம் அடைந்த சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ள ஆத்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் 20 வயதான ராகுல் காந்தி, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். 

இதனிடையே, கல்லூரி மாணவன் 20 வயதான ராகுல் காந்தி, காதலிப்பதாகக் கூறி, பள்ளி மாணவி அமுதாவின் பின்னால் சுற்றிக்கொண்டே திரிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அமுதா காதலை ஏற்காத நிலையில், எப்படியும் காதலிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், அவன் அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

கல்லூரி மாணவன் ராகுல் காந்தி, எவ்வளவோ சொல்லியும் பள்ளி மாணவி அமுதா காதலை ஏற்காததால், ஆத்திரமடைந்த கல்லூரி மாணவன் ராகுல் காந்தி, சமயம் பார்த்துக் காத்திருந்துள்ளதாகத் தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு மாணவி அமுதா, சிறப்பு வகுப்புக்காகப் பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் அமுதா வீடு திரும்பி வில்லை. இதனால், இதனால் அதிர்ச்சியடைந்த அமுதாவின் பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். அத்துடன், மாணவியின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் விசாரித்து உள்ளார். 

இந்த நிலையில், ஒரு தலை காதலன் ராகுல் காந்தி, அவனது நண்பர் ஜீவாவின் வீட்டில் வைத்து, அமுதவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால், அவமானம் அடைந்த அமுதா, வீடு திரும்பிய நிலையில், தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனால், பதறிப்போன அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அமுதாவை மீட்டு அவசர அவசரமாகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

கடந்த 10 நாள்களாக அமுதாவுக்கு அங்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நாட்றம்பள்ளி போலீசார், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவர்கள் ராகுல் காந்தி மற்றும் அவனது நண்பன் ஜீவா ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.