பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் சென்னையைத் தொடர்ந்து தற்போது முதுகுளத்தூரில் தான், தனியார் பள்ளி ஆசிரியர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
 
அதாவது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியான “பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில்” முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து கிட்டதட்ட 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அங்கு படித்து வருகின்றனர். 

இந்த பள்ளியில், பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஹபீப் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாக கூறப்படுகிறது. 

அப்போது, பள்ளியில் படிக்கும் சக பள்ளி மாணவியின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு, அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரமாகப் பார்த்து, அவர் பேசி வந்திருக்கிறார். 

மேலும், அப்படி பேசும் போது, சம்மந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை உறுதி செய்துகொண்டும், அவர்கள் வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் தெரிந்துகொண்டும், சம்மந்தப்பட்ட மாணவியிடம் பேசி, “உடனே உனது புத்தகத்தை எடுத்துக் கொண்டு, எனது வீட்டிற்கு வா”  என்று மிரட்டி அழைப்பாராம்.

அப்படி, “அழைத்தும் வர மறுக்கும் மாணவிக்கு மார்க் குறைவாகப் போட்டு பெயில் ஆக்கிவிடுவேன்” என்றும், தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆசிரியரின் மிரட்டலுக்குப் பயந்து, பல மாணவிகள் அவரின் வீட்டிற்குப் புத்தகத்துடன் வந்து உள்ளதாகவும் தெரிகிறது. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, “பல மாணவிகள் என் வீட்டிற்கு வந்துள்ளனர். அதே போல், நீயும் என் வீட்டிற்கு வர வேண்டும்” என்று, ஒரு மாணவியுடன் ஆசிரியர் ஹபீப் பேசும் ஆடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

இப்படியாக, பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி, முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வந்தார். 

அதன் தொடர்ச்சியாகவே, அறிவியல் ஆசிரியராக ஹபீப் காவல்துறையால் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.