பிளஸ்-1 படிக்கும் மாணவியை கடத்திய அரசு பள்ளி ஆசிரியர், அந்த மாணவியை திருமணம் செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்து உள்ள ஜிஞ்சம்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி 30 வயதான காவியா, அந்த பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

மூர்த்தியின் முதல் மனைவியின் மகளான 16 வயது சிறுமியுடன், அவரது 2 வது மனைவி காவியா சேர்ந்து ஒன்றாக வசித்து வருகிறார்.

அதே நேரத்தில், வறுமை காரணமாக 16 வயது மகளுடன் திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தில் தங்கி, காவியா தினசரி கூலி வேலை செய்து வந்தார். அத்துடன், வறுமியிலும் தனது மகளை திருவண்ணாமலையில் உள்ள டேனியல் மிஷன் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படிக்க வைத்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க தனது மகளுடன் சொந்த ஊரான ஜிஞ்சம்பட்டிக்கு பிளஸ்-1 படிக்கும் தனது மகளுடன், காவியா சென்று உள்ளார்.

தேர்தலில் ஓட்டுப் போட்டுவிட்டு, கடந்த 9 ஆம் தேதி மீண்டும் மேல்செங்கத்திற்கு செல்வதற்காக, அங்குள்ள மத்தூர் பேருந்து நிலையத்திற்கு அவர் தனது மகளுடன் வந்து உள்ளார். அப்போது, அவருடன் வந்த மகள், திடீரென மாயமாகி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தாயார் காவியா, அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்து உள்ளார். ஆனால், எங்குத் தேடியும் மகள் கிடைக்காத நிலையில், மகள் மாயமானது குறித்து தாயார் காவியா மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
 
காவல் நிலையத்தில் தயார் காவிய அளித்துள்ள புகாரில், “என்னுடன் வந்த 16 வயது சிறுமியை, திருவண்ணாமலை மாவட்டம் நாகனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் 31 வயதான சரண்ராஜ் என்பவர், திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றிருக்கலாம்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் சரண்ராஜிடம் இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும்” என்றும், அவர் அதில் வலியுறுத்தி உள்ளார். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர். மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், ஆள் கடத்தல் என்று, வழக்குப் பதிவு செய்து, ஆசிரியர் சரண்ராஜை அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், ஆசிரியர் உடன் இருந்த பிளஸ்-1 படித்து வந்த 16 வயது சிறுமியையும் போலீசார் பத்திரமாக மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர் சிறையில் அடைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.