10 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை 7 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொலை செய்த  கிணற்றில் வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

வட மாநிலங்களில் நடைபெறும் இது போன்ற சம்பவம் இப்போது தமிழ்நாட்டில், அதுவும் விழுப்புரம் மாவட்டத்தில் தான் நடந்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.இந்த மாணவி, அங்குள்ள கொங்கரப்பட்டு அரசு மேல் நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

தற்போது, கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த மாணவி தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.

இப்படியான நிலையில், கடந்த 11 ஆம் தேதி அன்று மாலை நேரத்தில், அந்த 16 வயது மாணவி, தனது வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார். 
நீண்ட நேரம் ஆகியும் அந்த மாணவி வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர்கள் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். அதன் 

தொடர்ச்சியாக, அந்த மாணவியின் உறவினர்களும், அந்த பகுதியில் பல இடங்களில் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால், அந்த மாணவி எங்குத் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனால், பயந்துபோன மாணவியின் பெற்றோர், “மகளை காணவில்லை” என்று, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கொங்கரப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து மாயமான மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 
இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாணவி மாயமான வழக்கை, கொலை வழக்காக மாற்றி தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையை இன்னும் தீவிரப்படுத்திய போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக மணியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான ராஜா , ஜெயபிரகாஷ், 28 வயதான ஜெயபால், 24 வயதான ஜெயக்குமார், 23 வயதான ஆனந்த், 22 வயதான ஜெயமூர்த்தி, 19 வயதான மகாலிங்கம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, “சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் முகத்தில் காயங்கள் இருப்பதால், அவரை 7 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, பிறகு அடித்து கொலை செய்து கிணற்றில் வீசினார்களா?” என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.