ஜெய்பீம் திரைப்பட சர்ச்சையில் நடிகர் சூர்யா மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொண்டுள்ளார் என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பையும், அதே நேரத்தில் வன்னியர்கள் மற்றும் பா.ம.க. தரப்பில் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டியிருந்தார். 1990-களில் விருத்தாச்சலம் பகுதியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணு என்பவர் காவல் நிலையத்தில் போலீஸ் சித்திரவதையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது 13 வருடங்கள் போராடி நீதியைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணு என்பவர் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்படுகிறார். இந்த வழக்கில் வழக்கறிஞர் கே.சந்துருவாக நடித்துள்ள சூர்யா நீதி பெற்று தருகிறார். 

a1

இந்த திரைப்படத்தில் ராசாக்கண்ணுவை காவல் நிலையத்தில் அடித்து சித்திரவதை செய்யும் எஸ்.ஐ குருமூர்த்தி கதாபாத்திரத்தின் வீட்டில் வன்னியர்களின் அக்னி கலசம் படம் போட்ட காலண்டர் இடம்பெற்றதால், ஒரு வன்முறை போலீஸை வன்னியராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறி பா.ம.க.வினரும், வன்னியர்களும் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி கலசம் நீக்கப்பட்டது.

இதனிடையே, பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி, நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினார். அதற்கு சூர்யாவும் வன்னியர்களை இழிவுப்படுத்தும் நோக்கம் எனக்கோ, படக் குழுவினருக்கோ இல்லை எந்த நோக்கமும் இல்லை என்று ட்விட்டர் வாயிலாக அறிக்கை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பா.ம.க.வினர் நடிகர் சூர்யாவை மிரட்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பா.ம.க.வின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர், நடிகர் சூர்யாவை உதைத்தால் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என்று கூறியதை அடுத்து, அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, அமேசான் நிறுவனத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது.

a4

எனினும், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், நாசர், நடிகைகள் ரோகிணி, ஷர்மிளா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொல் திருமாவளவன், பாலகிருஷ்ணன், சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான சவுக்கு சங்கர் ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

“கலாட்டா சேனலுக்கு” சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “பா.ம.க.விற்கு அரசியல் செய்வதற்கு வேறு வழியில்லாமல், திரையுலகை சேர்ந்தவர்களை தாக்குவதன் மூலம் “பப்ளிசிட்டி” தேடிக்கொள்கின்றனர். 10 விநாடிகளுக்கு வரும் அக்னி கலசம் போட்ட காலண்டரை வைத்து மிகவும் மலிவான அரசியல் செய்கின்றனர்.

ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி கலசம் குறியீட்டை நடிகர் சூர்யா நீக்கியிருக்கக் கூடாது. அக்னி கலசத்துக்கு பா.ம.க. என்ன காப்புரிமை வைத்திருக்கிறார்களா? கடந்த 15 நாட்களாக நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது, அக்னி கலசத்தை வைத்தது சரிதான் என்று தோன்றுகிறது. 

a3

நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்த மயிலாடுதுறை பா.ம.க. மாவட்ட நிர்வாகிக்கு, பா.ம.க. தலைமை கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதில் இருந்து, இதற்கு அவர்கள் சம்மதம் என்பதுபோல் அமைதி காத்து வருகின்றனர். ஜெய்பீம் திரைப்பட சர்ச்சையில் நடிகர் சூர்யா தற்போது மிகவும் முதிர்ச்சியுடன் சமூக அக்கறையுடன் செயல்படுகிறார்.  கடந்த 15 வருடங்களாக அகரம் பவுண்டேஷன் மூலம் சமூக சேவை செய்து வருவதன் காரணமாக நடிகர் சூர்யா மிகவும் பக்குவமடைந்துள்ளார்.

பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வட இந்தியாவில் திரைப்படங்களில் என்ன செய்கிறதோ அதை தான் வட தமிழகத்தில் பா.ம.க. செய்கிறது.  பா.ஜ.க. இந்து கடவுள்களை காட்டக் கூடாது எனக் கூறுவதைப்போல இவர்கள் மஞ்சள் நிறத்தையும், அக்னி சட்டியையும் காட்டக்கூடாது என்கின்றார்கள். இந்த இரண்டு கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தமிழகத்தின் பால்தாக்கரேவாக உருவாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். புகையிலை பிடிப்பதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் மீதான தாக்குதலைவிட, நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் திரைப்படத்தின் மீதான தாக்குதல் விஷமத்தனமானதாக இருக்கிறது.

பா.ம.க.  அன்புமணி ராமதாஸுக்கு சூர்யா எழுதிய கடிதத்தில் மிகவும் முதிர்ச்சியாக படைப்பு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதை அழகாக கூறியிருந்தார்” என்று சவுக்கு சங்கர் கூறியிருக்கிறார். மேலும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அளித்த முழுமையான பிரத்யேக பேட்டியின் வீடியோ இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.