சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக, பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித்ஷா பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டு காலமாகப் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் இருந்த சசிகலா, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். 

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “ “தொடர்ந்து நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். என்னுடைய செயல்பாட்டைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்று, சூளுரைத்தார்.

குறிப்பாக, “ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது” தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய சசிகலா, “இதை எல்லாம் தமிழக அரசு ஏன் செய்கிறது? என்று, தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று தெரிவித்தார். இதனால், அவர் தீவிர அரசியல் ஈடுபடப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

மேலும், “அதிமுகவின் பொது எதிரி ஆட்சி கட்டிலில் அமராமல் தடுக்க, ஒரே அணியாக செயல்படுவோம் என்றும், எம்ஜிஆர், ஜெயல‌லிதா வழியில் ஒரே அணியாக செயல்படுவோம்” என்றும் அவர் கூறினார். இதனால், அவர் அதிமுகவுடன் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்பட்டது.

ஆனால், அதற்கு முன்பே “திமுக கூட்டணியை வீழ்த்த கங்கை ஜலமாக இருந்தாலும், சாக்கடை ஜலமாக இருந்தாலும் ஏற்க வேண்டும்” என்று, சசிகலாவுடன் அதிமுக இணைவது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சூசகமாகப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சூசகமாகப் பேசியது போலத்தான், தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளானது ஒவ்வொன்றாக அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

இப்படியான சூழ்நிலையில் தான், சமீபத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, விழுப்புரத்தில் நடந்த பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று திமுகவை ஊழல் கட்சி என்று, மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

அதன் தொடர்ச்சியாகச் சென்னையில் அதிமுகவுடன் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சு வார்த்தையில் அமித்ஷா ஈடுபட்டார் என்றும், கூறப்பட்டது.

சசிகலாவை அதிமுக வில் இணைப்பது தொடர்பான இந்த பேச்சு வார்த்தை விவகாரத்தில், அதிமுக தலைமையிடம் ஒருமித்த கருத்து இல்லை என்றும், முக்கியமாக இபிஎஸ் - ஓபிஎஸ் உடனான பேச்சு வார்த்தையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், சசிகலாவை அதிமுக வில் இணைப்பது தொடர்பான விசயம் வெற்றி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வர உள்ளதால், அடுத்தடுத்து சில அதிரடியான திருப்பங்களைக் காணத் தமிழகம் தயாராக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.