கணவன் - மனைவி சண்டையில் கடுப்பான மனைவி, தன் கணவனைக் கடுமையாகத் தாக்கியதில், அவர் ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்கு நடந்தே சென்று சிகிச்சை பெற்ற பரிதாபம் சம்பவம் நடந்துள்ளது.

கணவன் - மனைவி சண்டையில் பொதுவாகக் கணவன் தான், மனைவியைக் கடுமையாகத் தாக்கி காயம் ஏற்படுத்தி வருவார் என்பது தான், உலகம் கடந்த காலங்களில் பார்த்த சண்டைக் காட்சிகள். ஆனால், அதற்குச் சற்று விதிவிலக்காகத் திகழ்ந்துள்ளது சேலத்தில் நடத்த கணவன் - மனைவி சண்டைக் காட்சிகள்.

சேலம் மாவட்டம் வீராணத்தை அடுத்துள்ள சின்னனூர் ஊராட்சி ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாய வேலை செய்துகொண்டிருந்தார். 

எப்போதும், விவசாய வேலைக்கு வந்த பிறகு, அவரது மனைவி மதியம் சாப்பாடு கொண்டு வருவது வழக்கம். ஆனால், நேற்று அவர் மதிய சாப்பாடு கொண்டு வரவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து, மாலை வேலைகளை முடித்துக்கொண்டு, வெங்கடேஷ் வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, ”மதியம் ஏன் சாப்பாடு கொண்டு வரவில்லை?” என்று வெங்கடேஷ், தன் மனைவியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கணவன் - மனைவி கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் மேலும் முற்றிய நிலையில், கடும் கோபம் அடைந்த 

வெங்கடேஷின் மனைவி, அருகிலிருந்த பூரிக்கட்டை, கரண்டி பருப்பு கட்டை உள்ளிட்ட சமையல் பொருட்களை எடுத்து, தன் கணவனை சராமாறியாக தாக்கியதாகத் தெரிகிறது.

இதில், படுகாயம் அடைந்த வெங்கடேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டி உள்ளது. ஆனால், சண்டை ஏற்பட்ட கோபத்தில் கணவனக்கு ரத்தம் வந்தும், அவரது மனைவி கணவனை மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்லவில்லை. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பரிதாப கணவன், மருத்துவமனைக்குச் செல்ல முயன்றுள்ளார்.

ஆனால், நேற்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் பேருந்து வசதியோ, ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட எந்தவித வசதியும் இல்லாததால் வெங்கடேஷ் கடும் அவதியடைந்துள்ளார். இதனையடுத்து, யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் மருத்துவமனைக்குத் தானாகவே நடந்தே சென்று உள்ளார். 

இதனால், அவர் ரத்தம் சொட்டச் சொட்ட சாலையில் அவர் பரிதாபமாக நடந்து சென்றதை, அப்பகுதி மக்கள் பலரும் பார்த்து பரிதாபப்பட்டனர். அதில், சிலர் என்ன நடந்தது என்று நலம் விசாரித்துள்ளனர். அப்போது, “என் மனைவி என்னை அடித்து விட்டார்” என்று அப்பாவியாக அவர் கூறிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பியதாகவும் தெரிகிறது.

இதனிடையே, கணவன் - மனைவி சண்டையில் கடுப்பான மனைவி, தன் கணவனைக் கடுமையாகத் தாக்கியதில், அவர் ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்கு நடந்தே சென்று சிகிச்சை பெற்ற சம்பவம், சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.