அதிமுக கொடிக்கம்பம் சரிந்து இளம் பெண் விபத்துக்குள்ளான நிலையில், “கொடி கம்பம் நட வேண்டாம் என நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் சாலையில் வைக்கப்பட்ட அதிமுக கொடிக் கம்பம் சரிந்து, இளம் பெண் ராஜேஸ்வரி என்கிற அனுராதா மீது விழுந்ததில், அவர் மீது லாரி மோதியுள்ளது. இதனையடுத்து, அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

CM Palanisamy

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுபஸ்ரீ விவகாரத்தில் அதிமுக பேனர் மிகப் பெரிய பிரச்சனையாக எழுந்த நிலையில், தற்போது ராஜேஸ்வரி என்கிற அனுராதா மீது அதிமுக கொடிக் கம்பம் விழுந்து, விபத்துக்குள்ளானதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், பல்வேறு அரசியல் கட்சியினரும், அதிமுகவிற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பலரும் சமூக வலைத்தளங்களில் அதிமுகவிற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார்.

CM Palanisamy

அப்போது, கோவையில் திருமண வரவேற்புக்காக அதிமுகவினர்  வைத்த கொடிக் கம்பம் சரிந்து விழுந்து, இளம் பெண் விபத்துக்குள்ளானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர், “ கொடிக்கம்பம் நட வேண்டாம் என நீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை” என சர்வ சாதாரணமாகப் பதிலளித்தார்.

முதலமைச்சரின் இந்த பதிலும், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.