சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி 4 வீடுகள் தரைமட்டமானதில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

சேலம் மாநகரம் 57-வது கோட்டத்திற்குட்பட்ட கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் வசித்து வருபவர் பத்மநாபன். இவர் தீயணைப்புத்துறை சிறப்பு நிலை அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில், பத்மநாபன் வீட்டில் சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும்போது, திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து நேரிட்டது. 

5 வீடுகளில் வசித்த சுமார் 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட தலைமை தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வெங்கட்ராஜன் (62), இந்திராணி (54), மோகன்ராஜ் (40), நாகசுதா (30), கோபால் (70), தனலட்சுமி (64), சுதர்சன் (6), கணேசன் (37), உஷாராணி (40), லோகேஷ் (18), கோபி (52) ஆகியோரை மீட்டு சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

s1

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா, மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கார்மேகம், ‘இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூன்று பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கோவை, அரக்கோணத்தில் இருந்து அதிநவீன கருவிகளுடன் மீட்பு படையினரும், கடலூரிலிருந்து பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்’ எனத் தெரிவித்தார்.

ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் இருந்த வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 7 மணிநேரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் 80 வயது மூதாட்டி ராஜலட்சுமி உயிரிழந்தார்.

s2

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தீயணைப்பு வீரர் பத்மநாபன் (46), பத்மநாபனின் மனைவி தேவி, முருகன் என்பவரது மகன் ராம் (20) மற்றும் எல்லம்மாள்(90) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

விபத்து ஏற்பட்ட வீடு அடுக்குமாடி குடியிருப்பு என்பதால், ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதால் வரிசையாக அடுத்தடுத்து இருந்த மற்ற வீடுகளில் தூண்கள், சுவர்கள் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், காலையிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.