கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதால், தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த ஆண்டு இதே மார்ச் மாதம் 24 ஆம் தேதி மாலை முதல் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 144 சட்டப் பிரிவின் கீழ் ஆட்சியர், காவல் ஆணையர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்க ஆணையிடப்பட்டது. அதன்படி, சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. 

அதன் படி, தமிழகத்தில் மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்ட நிலையில், யாரும் மாவட்டத்தை கூட தாண்ட முடியாமல் சில மாத காலம் அவதிப்பட்டனர். இவற்றுடன், பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு, இந்த உத்தரவை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டன.

அதன் பிறகு, கொரோனா வைரஸ் தாக்கம் குறைய குறைய ஊரடங்கில் மெல்ல மெல்லத் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாக, பல வெளிநாடுகளில் கொரோனா வைரஸின் 2 ஆம் தாக்கம் அலை வீசியது. ஆனால், தமிழகம் உட்பட இந்தியாவில் 2 ஆம் அலை பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால், தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது. இது 3 வத அலையா? என்று கேட்கும் அளவுக்கு கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில், இன்று மட்டும் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 56 மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு, மாணவி ஒருவருக்கு கடந்த 11 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த பள்ளி மாணவியுடன் தொடர்பில் இருந்த இதர மாணவிகள் 56 பேருக்கு கரோனா பாதிப்பு தற்போது உறுதி கண்டறியப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, தஞ்சை மாவட்டம் முழுவதும் குழு அமைத்துக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராஜுலு உத்தரவிட்டு உள்ளார். இவற்றுடன், கொரோனா பரவலை தடுக்க 35 குழுக்கள் அமைத்துத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், முதன்மை கல்வி அலுவலர் கூறியிருக்கிறார்.

முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தொடர்ச்சியாக 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்துகொண்டிருந்தன.

அதே போல், தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி மேலும் 695 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்று அதன் பாதிப்பு மேலும் அதிக்ககூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் கொரோனா பீதி மீண்டும் எழுந்துள்ளன. தற்போது கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதால், தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி பரவிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகம் - மராட்டியம் இடையே பஸ் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.