தமிழகத்துக்கு 5 புதிய புயல்கள் வரிசையாக உருவாக இருப்பதாகத் தகவல்கள் நேற்று முதல் பரவி வருகிறது.

தமிழகத்தில் கடந்த நவம்பர் தொடக்கம் முதலே வட கிழக்கு பருவ மழை தொடங்கி தீவிரமாகப் பெய்து வருகிறது. நவம்பர் மாத இறுதியில் ‘நிவர்’ புயலை எதிர்கொண்ட தமிழகம், அதன் தொடர்ச்சியாக, வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி டிசம்பர் ஒன்றாம் தேதி அது ‘புரெவி’ புயலாக மாறியது. தமிழகத்தில் நிவர் பயலின் தாக்கத்தினால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கொட்டி தீர்த்த கனமழையால் பல பகுதிகள் தற்போது வரை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. 

நிவர் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வடிவதற்குள், தென் மேற்கு வங்கக்கடலில் புரெவி என்ற புதிய புயல் உருவெடுத்து, தமிழகத்தையே மிரட்டியது. 

இலங்கையின் கிழக்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த புரெவி புயல், கடந்த 2 ஆம் தேதி இரவு இலங்கையில் திரிகோணமலையைத் தாக்கி விட்டு அதன் தொடர்ச்சியாக அந்த புரெவி புயல் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு நகர்ந்தது. இந்த புரெவி புயல் பாம்பனுக்கும் - கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடந்து பின்னர் அரபிக்கடலுக்குச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால், இலங்கையைக் கடந்த புரெவி புயல் சற்று திசை மாறி வடமேற்கு நோக்கி பயணித்துக் கடந்த 3 ஆம் தேதி பாம்பன் அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு ஒரே இடத்தில் நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் என படிப்படியாக வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதியில் நகராமல் நிலைகொண்டிருந்தது. இது தற்போது வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டிருக்கிறது. புரெவி புயலின் வலு சற்று குறைந்தாலும், தமிழகத்தில் பரவலாக மழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தை ஒட்டி உள்ள வங்கக்கடலில் உருவான நிவர், புரெவி புயல்களுக்குப் பிறகு, தற்போது இந்திய பெருங்கடலின் அமைதியைக் குலைக்கும் வகையில் 'அர்னாப்' என்னும் புதிய புயல் ஏற்படவிருப்பதாகச் செய்திகள் பரவி வருகின்றன. 

மேலும், அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தை மையமாகக் கொண்டு 5 புதிய புயல்கள் அடுத்தடுத்து உருவாக உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக பலரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் உருவாக இருப்பதாகவும், “டெளட்கோ புயல்” டிசம்பர் 8 ஆம் தேதியான இன்றைய தினமும், வரும் 17 ஆம் தேதி “யாஸ்” என்னும் புயலும், வரும் 24 ஆம் தேதி “குலாப்” என்னும் புயலும், அடுத்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி “ஷாஹீன்” என்னும் புயலும், ஜனவரி 8 ஆம் தேதி “ஜவாத்” என்னும் புயலும் உருவாவதாக இருப்பதாகவும்” தகவல் ஒன்று, நேற்று மாலை முதல் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக  வலைத்தளங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது. இதனால், பொது மக்கள் பலரும் பீதியடைந்து உள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜானும் டிவிட்டர் மூலம் விடுத்து உள்ள கோரிக்கையில், “இது முற்றிலும் தவறான தகவல்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“இத்தகைய தவறான வதந்திகளை ஃபார்வார்டு செய்வதை முற்றிலும் கை விட வேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

“சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இந்த புயலின் பெயர்கள் இந்த பட்டியலில் இருந்து எடுத்து பகிரப்படுகிறதே தவிர, இந்தத் தேதிகளும், அத்தகைய புயல்கள் எங்கு கரையைக் கடக்கும், மையம் கொள்ளும் என்பதற்கான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், “அதிகாரப்பூர்வமான வானிலை ஆய்வு மையத் தகவலைத் தவிர வேறு எதையும் யாரும் நம்ப வேண்டாம்” என்றும், கேட்டுக்கொள்வதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.