நாகை அருகே தேரின் சக்கரத்தில் சிக்கி ஒரு இளைஞர் உயிரிழந்த நிலையில், அவருக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. 

இந்த திருவிழாவின் முக்கியமாக நிகழ்வாக அந்த திருக்கோயிலின் சப்பரம் வீதி உலா நடைபெற்று வருகிறது. 

அதன்படி, உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தெருவடைத்தான் தேரோட்டம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

அப்போது, இந்த கோயிலின் தேரானது அங்குள்ள தெற்கு வீதியில் திரும்பி உள்ளது. அப்போது, அந்த தேர் திரும்பிய போது, அந்த தேரின் சக்கரத்தில் சிக்கி அந்த பகுதியைச் சேர்ந்த தீபராஜன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கிட்டதட்ட 60 அடி உயர அந்த தேரின் சக்கரமானது, தீபராஜனின் வயிற்றில் ஏறி இறங்கி உள்ளது. அந்த அளவுக்கு அந்த இளைஞர், அந்த தேரின் சக்கரத்தில் சிக்கித் தவித்திருக்கிறார். இதில், தீபராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். 

இந்த பயங்கர விபத்தை அருகில் இருந்து நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, “உயிரிழந்த தீபராஜன், அந்த தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்றும், அப்போது இந்த தேர் திருவிழாவின் போது அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதால், வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், இந்த அதிக அளவிலான மக்கள் கூட்டத்தால் எதிர்பாராத விதமாக அந்த நபர் அந்த தேர் சக்கரத்தில் அவர் சிக்கி உள்ளார்” என்றும், கூறியுள்ளனர்.

இனையடுத்து, கோயில் திருவிழாவில் நடந்த இந்த துயர சம்பவம் குறித்து அங்குள்ள திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, கோயில் திருவிழாவின் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்த தீபராஜன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 

அத்துடன், உயிரிழந்த தீபராஜன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழாவானது, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், அப்போது நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தேர் மீது உரசியதில், 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.