சென்னை ராயப்பேட்டையில் நேற்று இரவு 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையில் உள்ள புதுக் கல்லூரிக்கு எதிரே பழைய 5 மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடம் சென்னையைச் சேர்ந்த ஒருவரின் பூர்வீக சொத்து என கூறப்படுகிறது. கட்டிடத்தின் தரைதளத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டு இருந்தன.

1977-1982ஆம் ஆண்டு வரை இந்த கடைகளில் வாடகைக்கு இருந்தவர்கள் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் கடையை காலி செய்யாமல் இருந்துள்ளனர். அதோடு இந்த கட்டிடத்தின் மேல் தளங்களில் வீடுகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கட்டிடத்தை ஒரு ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜே.எம். ஆருணின் மகள் வாங்கியுள்ளார். இதையடுத்து அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புது கட்டிடம் கட்டுவதற்காக அங்கு வசித்து வந்தவர்களை காலி செய்யுமாறு கூறியுள்ளார்.

ஆனால், அவர்கள் வீட்டை விட்டு காலி செய்ய நஷ்ட ஈடு கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கட்டிடம் வாங்கியவர்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட நஷ்ட ஈட்டை பெற்றுக் கொண்டு அங்கு வசித்த 13 குடும்பங்களில் 12 குடும்பங்கள் காலி செய்து சென்றுவிட்டன. ஆனால் ரெஜினா பேகம் என்பவர் மட்டும் வீட்டை காலி செய்யாமல் ஒரு கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு வேண்டுமெனத் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் திடீரென 5 மாடி கட்டிடம் நேற்று இரவு 8 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் ரெஜினா அவரது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த கட்டிடத்தின் காவலரும் அச்சமயத்தில் வெளியில் சென்றதாக தெரிகிறது.

இதனால் இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. எனினும், வீட்டிலிருந்த பொருட்கள், கட்டிடத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் ஆகியவை அதிக சேதமடைந்துள்ளன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து , திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், எஸ்பிளனேடு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாகச் சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாகக் கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தின் மேற்பகுதியில் செல்போன் டவர்கள் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.