தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்ததைத் தொடா்ந்து, இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடத் தொடங்கின. தமிழக முதல்வர் பல்வேறு தினங்களில் நடந்த ஆய்வு அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ குழுவினர் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் ஊரடங்கு  நீட்டிப்பு  என அறிவித்தார்.

இந்நிலையில், இன்று  ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து  சேவை தொடங்கியுள்ளது. மேலும், சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கியது.

மேலும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரயில் சேவைக்கும், மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துப் போக்குவரத்துக்கும் தமிழக அரசு நேற்றைய தினம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். 

அரசு சார்பில், ``பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால், இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று முதல்வர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதில் தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் வரும் 7-ஆம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், இந்த ரயில்களின் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (செப்.5) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. 

பயணியா் ரயில் போக்குவரத்து 7-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே இயக்கப்பட்ட ஏழு சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகத்திடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதனை ஏற்று, கூடுதலாக, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூா், சென்னை சென்ட்ரல் -மேட்டுப்பாளையம், சென்னை-மதுரை, சென்னை -கன்னியாகுமரி, சென்னை-தூத்துக்குடி , சென்னை-செங்கோட்டை ஆகிய 6 சிறப்பு ரயில்கள் உள்பட 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், இந்த 13 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (செப். 5) காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள டிக்கெட் கவுன்ட்டா்கள் மூலமாகவும், இணையவழி மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. 

5 மாதங்களுக்குப் பிறகு முக்கியமான ரயில்கள் இயக்கப்படவுள்ளதால், டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
ஆனால், மாவட்டங்களுக்கு உள்ளேயேயான போக்குவரத்து தளர்வு வந்தவுடன், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதால் அப்பேருந்துகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கி உள்ளது. இதனால்,சமூக இடைவெளி கேள்விக்குறியாகி வருகிறது. இதன் காரணமாக வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அரசு  கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துது. இப்போது மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் தொடங்குகிறது என்றால், அரசு மிக மிக முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நிலை உள்ளது.