ஆராய்ச்சி மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில், கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இதன் காரணமாக, இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பள்ளி - கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாமல் தற்போது வரை உள்ளன. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இதனால், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்தும் வருகிறது.
 
அதன் படி, வரும் 16 தேதி முதல் 9 முதல், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், தமிழகத்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக குறையாத நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும், மாணவர்களின் பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, “பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிச்சாமி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்” என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

இந்நிலையில், சற்று முன்னர் “தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை” என தமிழக அரசு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. 

“தமிழகத்தில் உள்ள கொரோனா தொற்று காரணமாகவும், மாணவர்களின் நலன் கருதியும்” தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு
உள்ளது. 

மேலும், “பள்ளிகளை திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

எனினும், “அனைத்து ஆராய்ச்சி மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாணவர்களுக்கு மட்டும் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும்” என்று தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதே சமயம், “இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், “தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை” என்று, தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது.
 
முக்கியமாக, “சமுதாய, அரசியல், மதம் உள்ளிட்ட கூட்டங்களுக்கான அனுமதியானது, மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது” தமிழக அரசு தெரிவித்து உள்ளது.